பினாங்கில் 101,163 யூனிட் மலிவு விலை வீடுகள் – ஜெக்டிப்

ஜார்ஜ்டவுன் – பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 2008-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 101,163 யூனிட் மலிவு விலை வீடுகள் வழங்கியுள்ளது என வீடமைப்பு, உள்ளுராட்சி மற்றும் கிராமப்புற & நகர்புற மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த மொத்த எண்ணிக்கையில் மலிவு விலை, நடுத்தர மலிவு விலை மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடு அடங்கும்.

“தற்போது புள்ளியல் விபரம்படி இம்மாநிலத்தில் 29,924 யூனிட் வீடுகள் கட்டப்படும், 23,222 வீடுகள் கட்டுமானத்திலும் மற்றும் 48,017 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது”, என ஆட்சிக்குழு உறுப்பினர் விரிவுப்படுத்தினார்.

14-ஆவது பொதுத்தேர்தல் கொள்கை அறிக்கைப்படி 2025-க்குள் பினாங்கு மாநிலத்தில் 70,000 வீடுகள் கட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால் இதுவரை 101,163 வீடுகள் கட்டப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார். பினாங்கு மாநிலம் இன்னும் அதிகமான வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்ள இன்னும் முயற்சிகள் மேற்கொள்ளும் என ஜெக்டிப் நம்பிக்கை தெரிவித்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் புலாவ் தீக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் லீ சூன் கிட், பாயான் லெப்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்ருல் மகாதீர் அசீஸ், வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் மற்றும் வீடமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மாநில அரசு வாடகைக்கு வீடு வாங்கும் திட்டத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள் எதிர்நோக்கும் வங்கி கடனுதவி நிராகரிப்புக்கு உதவிக்கரம் நீட்டும் என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் தெளிவுப்படுத்தினார்.  மத்திய செபராங் பிறை மற்றும் தென்மேற்கு மாவட்டத்திலும் இத்திட்டத்திற்காக அடையாளங்காணப்பட்டுள்ளது.

முதல் வீட்டை வாங்குபவர்களுக்கு உதவ பல்வேறு புதுமையான வழிமுறைகளை உருவாக்க மாநில அரசு புத்தாக்கத் திட்டங்களை வழங்குள்ளது என்றால் மிகையாகாது.

மேலும், வருகின்ற மார்ச் மாதம் 8 -10 வரை புக்கிட் மெர்தாஜாம் மைடின் பேரங்காடியில் நடைபெறவிருக்கும் பினாங்கு மாநில மலிவு விலை வீடமைப்புக் கண்காட்சி 2019-க்கு பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கப்படுகின்றனர்.