பினாங்கு மாநில அரசு கோவிட்-19 தாக்கத்திலிருந்து  சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணம்

கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் உலக வாழ் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.

உலகளவில் இதுவரை 120 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த கொடிய நோய் தொற்றுக்கு உறுதிப்படுத்தப்பட்ட வேளையில்,     2.6 மில்லியனுக்கும் மேல்  உயிரிழந்துள்ளனர்.

கோவிட்-19 தாக்கத்தால் சமூகம், பொருளாதாரம் மற்றும் வணிகம் பாதிக்கப்படுகின்றன.

கடந்த ஓர் ஆண்டு காலமாக  ஒவ்வொரு நாடும் மற்றும் மாநிலமும் இந்த தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான  மீட்சி பாதையை நோக்கி பயணிக்கிறது. 

பினாங்கு மாநில அரசு மீட்சிக்கான  பணியை ஒரு போதும் நிறுத்தாமல் முன்னெடுத்துச் செல்கிறது என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறினார். 

“மாநில அரசு ஒன்றிணைந்து பொது மக்களின் சுமையைப் பகிர்ந்து கொண்டது. பினாங்கு மக்கள் உதவி திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட இலக்கு குழுவினருக்கு நிதிச் சுமையை குறைக்கும் பொருட்டு நிதியுதவி வழங்கப்பட்டது. 

“இந்த நெருக்கடியிலிருந்து மீட்சி பெற மாநில அரசின் நிதியுதவி மிக அவசியம்,” என முத்துச் செய்திகள் நாளிதழ் குழுவினருக்கு அளித்த பேட்டியில் சாவ் இவ்வாறு கூறினார். 

முதலீட்டாளர்கள் தொடர்ந்து  பினாங்கு மீது  நம்பிக்கைக் கொள்வது  பாராட்டக்குறியது, என்றார். 

“தொற்று நோயால் அதிக பாதிப்பு ஏற்பட்டாலும், மாநில அரசு 2020-ஆம் ஆண்டிற்கான மொத்த அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி முதலீடுகளில் ரிம 14.1 பில்லியன் பதிவு செய்துள்ளது.

“2019-ல் பதிவு செய்யப்பட்ட மிக கூடுதலான ரிம16.9 மில்லியன் முதலீடு  மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கான முதலீட்டு செயல்திறன்  குறிப்பிடத்தக்கவை. மேலும், அங்கீகரிக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் பினாங்கில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஏறக்குறைய 85% அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தித் திட்டங்கள்  செயல்படுத்த இணக்கம்  கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்

இந்த மாநிலத்தில் வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மை மேம்படுத்துவதற்கான சிறந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ள இந்த தொற்று நோய் தடையாக அமையவில்லை.

மாநில அரசு தொடர்ந்து’தேசிய ரீதியில் பிரமிக்கும்  குடும்பத்தை மையமாக கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல்’ எனும் பினாங்கு2030 இலக்கை அடைய முனைப்புக் காட்டப்படும்.

“கர்னி வார்ஃப்  திட்டம் குறித்த பணிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கர்னி வார்ஃப் திட்டம் நிறைவு பெற்றதும் பொதுமக்களுக்கு  ஒரு புதிய சூழல் மற்றும் பொது வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொது  பூங்காவாகவும் திகழும்.

இதற்கிடையில், பண்டார் பாரு ஆயர் ஈத்தாம் – துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுச்சாலை (தொகுப்பு இரண்டு) சாலை மேம்பாட்டுத் திட்டமும் தொடங்கப்படவுள்ளது.

“பினாங்கு நீர் விநியோக வாரியம் (பி.பி.ஏ) மூல நீர் பெறுவதற்கு மாற்று திட்டத்தை உத்தேசிப்பதோடு அதன் நீர் விநியோகம் தடையின்றி சீராக வழங்கப்படுவதையும் உறுதிச்செய்கிறது.

அதுமட்டுமின்றி, சமூக முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தும் வகையில் பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பாலின சமத்துவத்திற்கும் அதிக முன்னுரிமை வழங்குவதாக,” சாவ் கூறினார்.

“ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு விளையாட்டுத் துறையின்  வளர்ச்சியும் மிக அவசியம்,” என்று அவர் கூறினார்.