பினாங்கு மாநிலம் நாளை முதல் கூடுதல் 200,000 மருந்தளவு தடுப்பூசி பெறும்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு கடந்த வாரம் சுகாதார அமைச்சு (MOH) அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து,நாளை (செப்டம்பர் 3, 2021) முதல்
200,000 மருந்தளவு தடுப்பூசியை பெறும்.

இது மாநில அரசு செப்டம்பர் மாதம் தொடங்கி  பெற வேண்டிய 1,015,500 மருந்தளவுகளில் ஒரு பகுதியாகும் என்று முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ்  கூறினார்.

“சுகாதார அமைச்சின் ஒப்புதலுக்கு இணங்கி தடுப்பூசி பெறுவது, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தடுப்பூசி கடனுதவி சலுகையை  நிராகரிக்கிறோம் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. 

கடந்த ஆகஸ்ட்,31 அன்று சிலாங்கூர் மந்திரி பெசாரின் மரியாதை நிமித்தம் வருகையின் போது, ​​இரு தரப்பினரும்  எதிர்காலத்தில் தற்போதைய தேவைகளின் அடிப்படையில் தடுப்பூசி பெறுவது குறித்து கலந்தாலோசிக்கப்படும். இந்த கூடுதல் தடுப்பூசி சலுகையை பினாங்கு மாநிலம் பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது,” என்று 14வது சட்டமன்ற நான்காவது தவணை முதலாம் கூட்டத்தில் வழங்கிய தொகுப்புரையில் இவ்வாறு கூறினார். 

மாநிலத்தின் அனைத்து குடிமக்களும், குறிப்பாக பெரியவர்கள் உட்பட தடுப்பூசியைப் பெற்று பாதுகாப்புடன்  சமூக நோய் எதிர்ப்பு சக்தியை அடைய மாநில அரசு தொடர்ந்து அயராது பாடுப்படும்  என்று முதல்வர் கூறினார்.

பினாங்கு மாநிலத்தின் சிறந்த நல்வாழ்வுக்கு 
ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு இடையிலான ஒரு சமநிலையை அடைவது அவசியம்,” என்று அவர் கூறினார்.

பினாங்கு மாநிலத்தில் ஆகஸ்ட் 21 வரை, டெல்தா வகை  வைரஸ் உள்ளடக்கிய மொத்தம் 32 கோவிட் -19 வழக்குகள் மற்றும் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. 

“அந்த எண்ணிக்கையில் 24 நோயாளிகள் முழுமையான சிகிச்சையை பெற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்,” என்று பாடாங் கோத்தா   சட்டமன்ற உறுப்பினரும்  தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் இவ்வாறு தெரிவித்தார்.

டெல்தா வகை வைரஸ் வழக்கின் ஆய்வக முடிவுகள் பெறுவதற்கு நீண்ட காலம் அதாவது ஒரு மாதம் தேவைப்படுகிறது என கொன் யாவ் மேலும் கூறினார்.

பினாங்கு மாநில சுகாதாரத் துறை (ஜே.கே.என்) இந்த மாதிரிகளை 27 வது  வாரம் (ஜூலை 4 -10) முதல் 33 வது வாரம் (ஆகஸ்ட் 15 – 21) வரை அனுப்பிய மாதிரி முடிவுகள் கடந்த ஆகஸ்ட்,31 அன்று  பெறப்பட்டன.

மேலும், இம்மாநிலத்தில் டெல்தா வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி அடிப்படையில் மாதிரிகளை அனுப்புகிறது,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

டெல்தா வகை வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளில் பெருபான்மையினர் எந்த தடுப்பூசியையும் பெறாதவர்கள் என்று கொன் யாவ் கூறினார்.

“இதில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 27 பேர்கள் எந்த தடுப்பூசியும் பெறவில்லை. மேலும்,  ஐந்து பேருக்கு ஒரு மருந்தளவு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது. மாறாக இரண்டு மருந்தளவு தடுப்பூசி பெற்றவர்களுக்கு எதிராக எந்த வழக்குகளும் பதிவாகவில்லை.

“எனவே, தனிநபர், குடும்பம் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் பின்பற்றுவதில் அலட்சியம் கொள்ளக் கூடாது,” என எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாளுமன்ற உறுப்பினருக்கும் தலா 500 செட் கோவிட்-19 ஆன்டிஜென் விரைவு சோதனை கருவிகள் (சுய பரிசோதனை கருவி) வழங்கப்படும். இதனை மக்கள் பிரதிநிதிகள் தேவைப்படுவோருக்கு விநியோகிப்பர், என்றார்.