பினாங்கு லிட்டல் இந்தியாவில் வியாபாரம் தொடர்ந்து சரிவு!!

Admin

 

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை  (எம்.சி.ஓ 3.0) அமலாக்கத்தினால்
லிட்டில் இந்தியா வியாபாரிகள்
பெரும் வணிக இழப்புகளை எதிர்நோக்குகின்றனர். வியாபாரிகள் பொது மக்கள்
கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து மீட்சி பெறுவர் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

முத்துச்செய்தி நாளிதழ் லிட்டல் இந்தியா வளாகத்தில் மேற்கொண்ட நேர்காணலில் சில வியாபாரிகள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

இராஜேந்தர்,65 மாயா சில்க் உரிமையாளர்

“எம்.சி.ஓ 3.0 இன் போது அனைத்து பொருளாதாரத் துறைகளும் செயல்பட அனுமதி  வழங்கினாலும், வணிகம் இன்னும் மந்தமாகவே உள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வாடிகையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதால் வியாபாரம் செய்ய இயலவில்லை.

“எங்கள் வழக்கமான வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பட்டர்வொர்த், சுங்கை பட்டாணி மற்றும் கூலிம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள். ஏனென்றால், தீவில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது இந்த இடங்களில் அதிகமான  இந்தியர்கள் இருக்கின்றனர்.

“பொருளாதார ரீதியில் கண்ணோட்டமிடும் போது அனைவருக்கும் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாது. பொருளாதார பலம் கொண்டவர்கள்  மட்டுமே நீடிக்க இயலும்.

“இந்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்பட்ட பிறகு, வணிகம் புதுப்பிக்கப்பட முடியும். இருப்பினும், மீண்டும் மற்றொரு எம்.சி.ஓ அமலாக்கம் செய்தால்  நாங்கள் மீண்டும் இதே நிலைமைக்கு தள்ளப்படுவோம்.

“தொற்றுநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான சிகிச்சை கண்டுபிடிக்கும் வரை இந்த நிலைமை நீடிக்கும். அதுவரை, நாம் தொடர்ந்து இச்சூழலை கையாள வேண்டும்,” என்றார்.

விமலா தேவி,49 பழ விற்பனையாளர்

“எனது  காலை முதல் மாலை வரை இங்கு இயக்கும் எனது பழக்கடைக்கு  ஒரு நாளைக்கு சராசரியாக 10 வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

“நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு (சி.எம்.சி.ஓ) ஆணையின்  போது, மக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணிக்க முடியும் என்பதால் வணிகத்தில் முன்னேற்றம் காணப்பட்டது.  ஆனால் இப்போது, நிலைமை மோசமாக உள்ளது.

“கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை சரிவு காண எம்.சி.ஓ 3.0 உதவும் என்று நம்பிக்கை கொள்கிறேன். ஏனெனில், நாட்டில் தினசரி வழக்குகளில் ண்ணிக்கை அதிகரித்த வண்ணமாகவே இருக்கிறது.

“ஒரு சிறு வியாபாரி என்ற முறையில், இந்த எம்.சி.ஓ 3.0 இன் போது  மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் இந்த நடவடிக்கை நாட்டை மீண்டும் ஆரோக்கியமான சூழலுக்கு மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக,” கூறினார்.

பழனிசாமி, மேற்பார்வையாளர், வினித்தா பெஷன்

“எங்களுடையது ஒரு ஜவுளி வணிகம். இப்போது இருக்கும் காலகட்டத்தில், மக்கள் ஆடைகளுக்கு அதிகமாக செலவிடுவதில்லை. அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.

“எம்.சி.ஓ 3.0-ல் எனது வணிகம் 90% பாதித்துள்ளது. காலையில் கடையைத் திறந்து பின்னர் இரவில் அதை மூடிவிட்டு, எந்தவொரு விற்பனையையும் செய்யாமல் இருப்பதற்காகவே நாங்கள் இங்கு வருகிறோம்.

“மேலும், தற்போது எந்த நிகழ்ச்சிகளும் நடைபெற அனுமதி வழங்கபடாத சூழலில். ஜவுளி கடைகளுக்கு வருகையளிக்க வேண்டிய அவசியம் மிகவும் குறைவாக அமைகிறது.

“நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தலாம். இதனால், கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க ஏதுவாக இருக்கும். ”

 

“எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் பினாங்கில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவதால், எங்கள் வணிகம் நிச்சயமாக பாதிக்கப்படுகிறது. பயணக் கட்டுப்பாடு இல்லாத போது, சிலர் தைப்பிங், கூலிம் மற்றும் சுங்கை பட்டாணி இடங்களில் இருந்து வருகை அளிப்பர்.

“லிட்டில் இந்தியா அருகே பல அலுவலகங்கள் உள்ளன, இந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தினமும் எங்கள் கடைக்கு வருவார்கள். ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலோர் ‘வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்’ என்பதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

இராஜ், உணவக உரிமையாளர்

 

“தற்போது குறைவான வாடிக்கையாளர்கள் இருப்பதால், உணவு தரத்தின் அடிப்படையில் எங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான வழிகள் கண்டறிய முற்படுகிறோம்.
நாங்கள் உணவு விநியோக சேவைகளுக்கும் விண்ணப்பித்துள்ளோம், இன்னும் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

“வழக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது, எம்.சி.ஓ நீட்டிக்கப்படும். கோவிட் -19 நோய்த்தொற்று வழக்குகள் எளிதில் குறைந்து வருவதாக தெரியவில்லை. ஒருவேளை, சரியான தடுப்பூசி மூலம் தொற்றுநோயை நிவர்த்தி செய்து குணமாக்க முடியும்,” என கூறினார்.

டேவசிங்கம், இடியாப்பம் கடை உரிமையாளர்

“எங்கள் வணிகம் எம்.சி.ஓ 3.0-ல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட 50% முதல் 60% வரை வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துள்ளது. இன்று நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகள் மற்றும் இறப்பு விகிதம் எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

“பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து  அக்கறை கொள்வதாகவும் இதுதான் இப்போது மிகவும் முக்கியமானது,” என்றார்.

“இந்த கடை 1985 ஆம் ஆண்டு முதல் பெற்றோர்களால் தொடங்கப்பட்டது. ஆகவே, எங்கள் கடைக்கு பழமையான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள், இது வணிகத்தைத் தக்கவைக்க எங்களுக்கு உதவுகிறது.

“தடுப்பூசி திட்டம் இந்த வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அடைய உதவும், ” என தெரிவித்தார்.