பிறை தொகுதி பொது மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் – பேராசிரியர்

Admin

பிறை – அண்மைய காலமாக கோவிட் -19 வழக்கு பதிவுகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து  தாமான் சாய் லெங் மற்றும் தாமான் கிம்சார் வட்டாரத்தில் வசிக்கும் வசதிக்குறைந்த பி40 குழுவைச் சேர்ந்த 500 குடியிருப்பாளர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

பினாங்கு இரண்டாம் துணை முதல்வர்  பேராசிரியர் ப.இராமசாமி  தாமான் சாய் லெங் பல்நோக்கு மண்டபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்வட்டார பொது மக்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கினார்.

பிறை சேவை மையம் மற்றும்
தாமான் சாய் லெங் பல்நோக்கு மண்டப நிர்வாகக் குழு இணை ஆதரவில் 500 உணவுக் கூடைகள்  வழங்கியதாக பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் இராமசாமி தெரிவித்தார்.

“பல தரப்புகள் மூலம்  இந்த பொருளுதவி கிடைக்கப்பெற்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

பிறை தொகுதியில் இதுவரை 1,075 உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வரும் நாட்களிலும் கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்றார்.

பிறை தொகுதியில் மட்டுமின்றி, இம்மாநிலத்திற்கும் அப்பாற்பட்ட  கோலாலம்பூர் மற்றும் கெடா மாநிலத்திலும் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கியுள்ளோம்.

இதற்கிடையில், செபராங் பிறை மாநகர் கவுன்சிலர் டேவிட் மார்ஷல், உணவுக் கூடைகள் வழங்குவதைத் தவிர, வீட்டு வாடகை செலுத்த முடியாத ஏழை மக்களுக்கும்  பண உதவி வழங்குவதைக் கருத்தில் கொள்ளுமாறு மாநில அரசிடம் கோரிக்கை முன் வைத்தார்.

“இப்போது  அவர்களுக்கு வாடகை செலுத்தவும்  ‘பாம்பேர்ஸ்களை’ வாங்கவும் பணம் தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

“பிறையில் நாங்கள் முடிந்த அளவில் உதவிகளை நல்குகிறோம். பிறை தொகுதி தவிர்த்து மற்ற இடங்களில் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. உணவுக் கூடைகள் மட்டும் கொடுத்தால்  போதாது. எனவே, முதியவர்கள் பயன்படுத்தும் ‘பாம்பேர்ஸ்’; குழந்தை ‘பாம்பேர்ஸ்’ மற்றும் பால்மாவு வாங்க பணம் தேவை. அவர்களின் தேவைக்கு ஏற்ப எங்களால் இந்த அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுக்க முடியாது. ஏனெனில், ஒவ்வொருர் வெவ்வேறு பால்மாவு பயன்படுத்துகின்றனர்,” என டேவிட் குறிப்பிட்டார்.

ஆகையால், பண உதவி வழங்குவதன் மூலம் அவர்களின் சிரமத்தை குறைக்க முடியும்.

62 வயதான ஓய்வுபெற்ற தொழிற்சாலை தொழிலாளி லியோனல் நாதன், உணவுக் கூடை வழங்கியதற்கு நன்றி கூறினார். “நான் இப்போது வேலையில்லாமல் இருக்கிறேன், தாமான் சாய் லெங்கில் உள்ள தேவாலயத்தில் தங்கியிருக்கிறேன். இந்த
உணவுக் கூடை வழங்கும் நிகழ்ச்சியைப் பற்றி தனது தேவாலயத்திற்கு அருகிலுள்ள பதாகையில் கண்டேன்.  அதை சேகரிக்க  இன்று வந்ததாக,” அவர் கூறினார்.

பிறை நகரைச் சேர்ந்த தனித்துவாழும் தாய்மாது பரமேஸ்வரி,53 வேலையின்றி அவருடைய  32 வயது மகளுடன் வசிப்பதாக கூறினார்.

“தற்போது நாங்கள் ஒரு கடினமான நேரத்தை கடக்கிறோம், மேலும் பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில் தக்க சமயத்தில் இந்த உதவு கிடைக்கப்பெற்றது. இத்திட்டம் பற்றி அண்டை அயலார் மூலம்  அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தாமான் கிம்சாரைச் சேர்ந்த ஜே.கே.ஆர் ஓய்வூதியர் பாலகிருஷ்ணன், 65, இந்த உணவுக் கூடை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேராசிரியர்
இராமசாமி உட்பட அனைத்து தரப்பினரின் செயலையும் பாராட்டினார்.

“நான் அரசாங்க ஓய்வூதியராக இருந்தாலும், கோவிட்-19 தாக்கத்தால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய  பணம் தேவைப்படுகிறது.
இவருடன் வசிக்கும் இரு பிள்ளைகளில் ஒருவர் பணிபுரிவதாக   கூறினார்.