பி.டி.சி 2019-2023 வியூகத் திட்டம் வரவேற்கத்தக்கது – சாவ்

Admin

பாயான் லெப்பாஸ் – பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் (PDC) 2019-2023 வீயூகத் திட்டம் மூலம் நீண்ட காலத்திற்கு மாநில ஏஜென்சிக்கு வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல், பினாங்கின் பொருளாதாரத் திறனை மேலும் விரிவுப்படுத்தவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முடியும் என்று
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் நம்பிக்கை தெரிவித்தார்.

மாநில நிலம் மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், பினாங்கு மேம்பாட்டுக் கழக 2023 நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது இவ்வாறு கூறினார்.

“பி.டி.சி இன் வியூகத் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட திட்டங்கள் நீண்ட காலத்திற்கு பி.டி.சிக்கு சிறந்த வருமானத்தை அளிக்கும் திறன் கொண்டது.

“பிற அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் திட்டமிடல் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்புடன்
பொருளாதாரத்தின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கு இது ஓர் உந்துசக்தியாக இருக்கும். இது பினாங்கில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்,” என்று கொன் இயோவ் விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில், பினாங்கு ஆளுநர், மாண்புமிகு (TYT) டத்தோஸ்ரீ உத்தாமா துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் மற்றும் அவரது துணைவியார் தோ புவான் டத்தோஸ்ரீ உத்தாமா கத்திஜா முகமது; முதலமைச்சரின் துணைவியார் தான் லீன் கீ, இரண்டாம் துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி, மாநில சட்ட ஆலோசகர் ரோஸ்லிண்டா முகமது ஷாபிக் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

1969 இல் நிறுவப்பட்ட பி.டி.சி,
கடந்த மூன்று ஆண்டுகளாக கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தினால்
பொருளாதார நெருக்கடியிலிருந்து
மீட்டெடுக்க புதிய வாய்ப்புகளை ஆராய்வதில் பி.டி.சி இன் நடவடிக்கைகள் கண்டு தனது நிர்வாகம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக சாவ் கூறினார்.

2023 இன் முதல் காலாண்டில் (1Q23), பி.டி.சி திட்டம் 2019-2023 மூலம், பல்வேறு உத்திகள் மற்றும் முன்முயற்சிகள் செயல்படுத்தப்பட்டன, குறிப்பாக இந்தக் கழகத்தின் சிறந்த மற்றும் நிலையான வருவாயை உருவாக்கக்கூடிய திட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது, என்று கொன் இயோவ் கூறினார்.

இதுவரை பி.டி.சி இம்மாநிலத்தில் ஒன்பது தொழில்துறை பகுதிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இந்த ஆண்டு, பண்டார் காசியா தொழில்நுட்ப பூங்கா மற்றும் பத்து காவான் தொழில் பூங்கா 3 ஆகிய பகுதிகளில் அதிகரித்து வரும் முதலீட்டாளர்களின் தேவையைப் பூர்த்திச் செய்வதற்காக சுமார் 673 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த தொழில்துறை பூங்காவாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, பி.டி.சி தற்போது பினாங்கை உலகளாவிய வணிகச் சேவைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) ஆகியவற்றில் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக மாற்றுவதற்கான முன்முயற்சிகளைத் தொடர்கிறது.

பி.டி.சி முயற்சிகளில் [email protected] மற்றும் [email protected] திட்டத்திற்கு பிறகு மூன்றாவது ஜி.பி.எஸ் திட்டமான ‘GBS By The Sea’ திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

கூடுதலாக, சோலார் வோல்டெக் சென் பெர்ஹாட் என்ற துணை நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் பசுமை ஆற்றல் மற்றும் கழிவு மேலாண்மை துறையில் கால்பதித்த பி.டி.சி இன் தைரியத்தையும் கொன் இயோவ் பாராட்டினார்

இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, Motorola Innoplex, SME பாயான் லெபாஸ் (பிளாட் 105), SME மையம் பத்து காவான், [email protected] Mahsuri, [email protected], பி.டி.சி காட்சியகம் மற்றும் கொம்தார் போன்ற பி.டி.சி மேம்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் பல சாத்தியமான சூரியத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2019-2023 பி.டி.சி வியூகத் திட்டத்தை நிறைவேற்றுவதில் அஜீஸ் தலைமையிலான நிர்வாகத்தின் முயற்சிகளை கொன் இயோவ் பாராட்டினார்.