புக்கிட் பெண்டேரா தொகுதியின் இரு தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியுதவி

Admin

ஆயர் ஈத்தாம் – புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய் அத்தொகுதியில் உள்ள அஸாத் மற்றும் இராஜாஜி தமிழ்ப்பள்ளிகளுக்குத் தலா ரிம10,000 நிதியுதவியாக வழங்கினார். இந்த இரு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரிம20,000 நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“பினாங்கு மாநிலத்தில் 28 தமிழ்ப்பள்ளிகள் இருக்கும் வேளையில், புக்கிட் பெண்டேரா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இடம்பெறும் இந்த இரு பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த உதவிட வேண்டியது எனது கடமை,” என காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப்பின் இவ்வாறு கூறினார்.

பினாங்கு மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் கண்காணிப்புக் குழு மற்றும் ‘மிஸினரி’ பள்ளிகள், சீனப்பள்ளிகளுக்கான சிறப்புக் கண்காணிப்புக் குழு என இரு குழுக்களை அமைத்து அதன் கல்வி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த ஊக்குவிக்கிறது. மேலும், மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மானியம் வழங்கி வருகிறது. அவ்வகையில், கடந்த ஆண்டு(2021)
தமிழ்ப்பள்ளிகள் (ரிம2.0 மில்லியன்); பாலர் பள்ளிகள்(ரிம150,000); பஞ்சாபி பள்ளிகள் (ரிம90,000) மற்றும் தமிழ்ப்பள்ளி சிறப்புக் கண்காணிப்புக் குழுவிற்கு நிதியாக (ரிம150,000) என மானியம் வழங்கப்பட்டது.

“தற்போது, ஆலய நிலத்தில் அமைந்திருக்கும் இராஜாஜி தமிழ்ப்பள்ளி இடமாற்றம் செய்ய வேண்டும். மாநில அரசு அப்பள்ளிக்கு
பார்லிம், ஆயிர் ஈத்தாம் வட்டாரத்தில் நிலம் ஒதுக்கீடு வழங்க அதற்கான ஆயுத்தப் பணியில் ஈடுப்பட்டு வருகிறது . இருப்பினும், இந்த தமிழ்ப்பள்ளி இடமாற்றம் காண பல செயல்முறைகள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே, மாநில அரசின் அறிவிப்புக்காக காத்திருப்போம்,” என்று வோங் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் இராஜாஜி தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் சந்திரம்; அஸாட் தமிழ்ப்பள்ளி வாரியப் பிரதிநிதி சண்முகநாதன்; எம்.பி.பி.பி கவுன்சிலர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வோங், பள்ளி பிரதிநிதிகளிடம் நிதியுதவிக்கான காசோலை வழங்கி சிறப்பித்தார்.

“மேலும், மாநில அரசு கடந்த காலங்களில் பினாங்கு இந்தியர் சங்கத்தின் கீழ்த்தளத்தில் இயங்கி வந்த அஸாத் தமிழ்ப்பள்ளிக்கு கெபூன் பூங்கா பகுதியில் புதிய நிலம் ஒதுக்கீடுச் செய்து இன்று கம்பீரமான சூழலில் இயங்குவதற்கு வித்திட்டது,” என தெரிவித்தார்.

மாநில அரசாங்கம் தொடர்ந்து இந்தியர்களின் மேம்பாட்டிற்கும் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் உதவிக்கரம் நீட்டும், என்றார்.

‘இந்த மானியத்தைப் பயன்படுத்திக் கூடிய விரைவில் தொடங்கவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசம், கோவிட்-19 பரிசோதனை கீட், மற்றும் மாணவர்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப் பயன்படுத்துமாறு,” கேட்டுக் கொண்டார்.