பைராம் தோட்ட மக்களுக்கு விரைவில் புதிய வீடுகள் கட்டப்படும் – பேராசிரியர்

மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசு பைராம் தோட்டத்தை சேர்ந்த 59 குடும்பங்களுக்கு மறுவீடமைப்புத் திட்டத்தின் கீழ் 8.75 ஏக்கர் நிலப்பரப்பில் வீடுகள் கட்டப்படுவதோடு பைராம் தோட்ட மக்களின் நலனுக்காக 76 தரை வீடுகளும், புதிய தோற்றத்தில் இரட்டை மாடிக் கொண்ட தமிழ்ப்பள்ளி, திடல் மட்டுமின்றி இந்து ஆலயமும் கட்டப்படும்,” என மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

இந்த மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ள மாநில அரசு ரிம15 லட்சம் நிதி ஒதுக்கீடுச் செய்துள்ளது. இந்நிதி ஒதுக்கீட்டில் லோட் 7578 நில மீட்டெடுப்பும் உள்ளடங்கும்.

தற்போது பைராம் தோட்டத்தில் 59 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர். இருப்பினும் மாநில அரசு 76 வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், அண்மையில் இத்தோட்டத்தை விட்டு வெளியேறிய குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க மாநில அரசு உத்தேசித்துள்ளது,” என பைராம் மறுவீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் அஸ்னோன், ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ, ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ மற்றும் மாநில செயலாளர் டத்தோ ஶ்ரீ பாரிசான் பின் டாருஸ் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாநில அரசு 1990-ஆம் ஆண்டுகளில் புலாவ் பூருங் திடக்கழிவு அகற்றும் தளத்தை அமைக்க பைராம் தோட்டத்தின் 1,000 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியது. இதனால் 39 குடும்பங்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 31/10/2012-ஆம் நாள் செபராங் பிறை நகராண்மைக் கழகம் மற்றும் பினாங்கு மாநகர் கழகம் இணைந்து புலாவ் பூருங், திடக்கழிவு அகற்றும் தள மேம்பாட்டுத் திட்ட மூன்றாவது பிரிவு மேற்கொள்ள பி.எல்.பி டெராங் சென்.பெர்ஹாட் நிறுவனத்துடன் ஒப்பந்த உடன்படுக்கையில் கையொப்பமிட்டது. இந்த மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளும் பொருட்டு பைராம் தோட்ட 59 குடும்பங்களுக்காக மறுவீடமைப்புத் திட்டம் அமைக்கப்படுகிறது என தெளிவுப்படுத்தினார்

எனவே, மாநில அரசு என்றும் பொது மக்கள் குறிப்பாக இந்தியர்களின் நலனில் அக்கரைச் செலுத்தும் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.