மக்களின் நலனுக்காக வெள்ள நிவாரணத் திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் – மாநில முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், கடந்த 20 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்கை பினாங்கு வெள்ள நிவாரணத் திட்டத்தை (ஆர்.டி.பி) பொது மக்களின் நலனுக்காக உடனடியாக செயல்படுத்த வேண்டும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

சுமார் ரிம150 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்படும் இந்த திட்டம், டத்தோ கெராமாட், பி. ரம்லீ சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனையைத் தீர்க்க உடனடியாக செயல்படுத்தப்படுவது அவசியம் என்றார்.

“சுங்கை பினாங்கு வெள்ள நிவாரணத் திட்டம் கடந்த 20 ஆண்டுகளாக ஆலோசனையில் உள்ளது என நாங்கள் அறிவோம், ஆனால் அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, இந்த முறை நியமிக்கப்பட்ட குத்தகையாளர் குத்தகையை செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இறுதி வடிவமைப்புத் திட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என நம்புகிறேன்.
“இந்த வெள்ள நிவாரணத் திட்டம் சுங்கை பினாங்கு ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். எனவே, 12-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் ரிம150 மில்லியனின் முதல் கட்ட மேம்பாட்டுத் திட்டம் உடனடியாகத் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் சுங்கை பினாங்கு ஆற்றை முழுமையாக மேம்படுத்த ரிம600 மில்லியனுக்கும் அதிகமாக செலவாகும். எனவே, இது கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட வேண்டும்,”என சுங்கை பினாங்கு ஆற்றினை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் மாநில முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் பேசிய மாநில முதல்வர், சுங்கை பினாங்கு தீவின் மிகப்பெரிய நதி அமைப்பு என்றும், புக்கிட் பெண்டேரா மற்றும் ஆயிர் ஈத்தாம் முதல் ஜெலுதோங் வரை ஐந்து ஆறுகளாகப் பாய்கின்றன என்றும் கூறினார். எனவே, சுங்கை பினாங்கு நதிக்கு ஐந்து நதிகளிலிருந்து தண்ணீர் பாய்க்கப்படுவதால், அதனால் போதுமான தண்ணீரை சேமிக்க முடியாத நிலைமையில் வெள்ளப்பெருக்கு நிலவுகிறது.
மாநில அரசு பினாங்கின் சில பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைக்க 2018-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட வெள்ள நிவாரணத் திட்டங்களை விரைவாக நிறைவுச் செய்ய வேண்டும் என மாநில நீர்ப்பாசன துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு இந்த மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரிம150 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியது. இந்நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட திடீர் வெள்ளம் ஏற்படும் ஆறு இடங்களில் வெள்ள நிவாரணத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் விவரித்தார்.
அதே தினத்தன்று மாநில முதல்வர், ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினருடன் பாயான் பாரு மற்றும் பத்து மாவுங் வெள்ள நிவாரணத் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனிடையே, பினாங்கு மாநிலத்தில் வெள்ளம் ஏற்படும் இடங்களை அடையாளங்கண்டு மாநில அரசிடமும் மத்திய அரசிடமும் நிதி ஒதுக்கீடுப் பெற விண்ணப்பிக்குமாறு மாநில முதல்வர் மாநில நீர்ப்பாசனத் துறைக்கு பணிந்துள்ளார்.
அதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரில் கீர் ஜொஹாரி சுங்கை நிபா வெள்ள நிவாரணத் திட்டம் 69 விழுக்காடு நிறைவடைந்துள்ளது என்றார். இத்திட்டத்தில் உள் அமைப்பை மேம்படுத்துவதோடு கூடுதலாக இரண்டு ‘பம்ப் ஹவுஸ்’ கட்டப்படவுள்ளன என குறிப்பிட்டார்.