மத்திய அரசு கோவிட் -19 திரையிடல் செலவினத்தை ஏற்க வேண்டும் – ஜெக்டிப்

Admin

 

ஜார்ச்டவுன் – மத்திய அரசு அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் கட்டாய கோவிட் -19 திரையிடல் செய்ய வேண்டும் என அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான
செலவினத்திற்கு
நிதியுதவி வழங்குமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ

மாநில உள்ளூராட்சி, வீடமைப்பு, நகர்புற மற்றும் கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் கூறுகையில், அனைத்து முதலாளிகளும் தங்கள் தொழிலாளர்களின் கோவிட்-19 திரையிடலுக்கு உட்படுத்தும் செலவினங்களை ஏற்கும் வல்லமை கிடையாது, என்றார்.

“நாட்டில் 1.1 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதால், அதைச் செய்வதற்கான திறன் நமக்கு இருக்கிறதா என்பது தொழில்துறை தரப்பினரின் கேள்வியாகும்.

“கோவிட்-19 திரையிடல் செய்வது நல்லது. இருப்பினும், அதனை எப்படி, எங்கு மற்றும் யார் செலவை ஏற்கப் போகிறார்கள் என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.

ஜார்ச்டவுனில் உள்ள பினாங்கு வாடா குருத்வாரா சாஹிப் ஆலயத்தில் சீக்கியர்களின் முதல் குருவான குருநானக்கின் 551-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.

மூத்த அமைச்சரான டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், கிளினிக் அல்லது மருத்துவமனை சேவைகளுக்கான செலவை முதலாளிகளே செலுத்த வேண்டும். அதே வேளையில் சமூக பாதுகாப்பு அமைப்பு (சொக்ஸோ) முதல் முறை செய்யப்படும் சோதனைக்கு மட்டுமே பரிசோதனை கிட் (ரிம 60) செலவை ஏற்கும் என அறிவித்தார்.

அண்மையில், ஏப்ரல் மாதத்தில் கட்டுமானத் துறையில் பணிப்புரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக திரையிடல் நடத்திய முதல் மாநிலமாக பினாங்கு விளங்கியது. ​​ஒரு சோதனைக்கு ரிம600 முதல் ரிம700 வரை செலவாகியது, ஆனால் அது ஒரு அமைப்பின் ஒத்துழைப்புடன் இத்தொகை குறைக்கப்பட்டது.

கட்டுமானத் துறையைச் சேர்ந்த சுமார் 15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே திரையிடல் செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
.
“பினாங்கில் சுமார் 127,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர். அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களும் கட்டாயத் திரையிடல் செய்ய வேண்டும் என்ற தேசிய தீர்ப்பின் மூலம், மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

“முதலாவதாக, நாம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணிபுரியும் அதிக ஆபத்து நிறைந்த துறைகளை அடையாளம் காண வேண்டும். மேலும், ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒரு முறை ஸ்கிரீனிங் செய்ய வேண்டும், ” என்று ஜெக்டிப் கூறினார்.

இன்றுவரை, மாநிலத்தில் 13 கிளாஸ்டர்கள் உள்ளன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த 23,159 பேர்களுக்கு திரையிடலுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், சிலர் சோதனை முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய இரு ஊராட்சி மன்றங்களும் வழக்குகள் அதிகரிக்கும் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கோவிட் -19 நெருக்கடியின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பினாங்கு சீக்கியர் சமூகம் உலகெங்கிலும் உள்ள தங்கள் சகாக்களுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

பினாங்கு வாடா குருத்வாரா சாஹிப் ஆலயத் தலைவர் தல்ஜித் சிங் மற்றும் குர்மீத் கோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேலை இழந்தவர்கள் மற்றும் பரிதவிக்கும்
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த ஆலய நிர்வாகம் உதவியுள்ளது என தல்ஜித் கூறினார்.

“நாங்கள் 24,000 உணவு பொட்டலங்களை வசதி குறைந்த குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம். நாங்கள் ரிம60,00 நிதியுதவி வழங்கியுள்ளோம் மற்றும் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்,” என்றார்.

120 ஆண்டுகள் பழமையான இந்த வாடா குருத்வாரா சாஹிப் ஆலயம் முதலாம் பிரிவுக்கான பாரம்பரிய கட்டடிட வகையைச் சேர்ந்தது. இந்த ஆலயம் தற்போது புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பினாங்கு வாடா குருத்வாரா சாஹிப் ஆலயம்

இம்மேம்பாட்டுப்பணி ஏறக்குறைய ரிம5.5 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இப்பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.