மத்திய அரசு இரண்டு மில்லியன் டோஸ் தடுப்பூசி நன்கொடைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்

Admin

ஜார்ச்டவுன் – மத்திய அரசு பொது மக்களின் நன்மைக்காக பினாங்கு மாநில அரசு கோவிட்-19 தடுப்பூசி நன்கொடையாக பெற அனுமதிக்க வேண்டும் என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் பொருட்டு 2 மில்லியன் டோஸ் தடுப்பூசி  ஒரு தனியார் நிறுவனமிடம் இருந்து நன்கொடையாக பெறும் வாய்ப்பினை வரவேற்பதாக கூறினார். 


“மாநில அரசு இந்த தடுப்பூசியை நன்கொடையாக பெறுவதற்கு மலேசிய சுகாதார அமைச்சின் 
(கே.கே.எம்) தலைமை செயலாளருக்கு அதிகாரப்பூர்வ கடிதம் கடந்த பிப்ரவரி மாதம் சமர்பிக்கப்பட்டது.

“இந்த நன்கொடை பெறுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, மத்திய அரசின் நிதி சுமையை  குறைக்க முடியும்,என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக கே.கே.எம் பதில் கடிதத்தில் தனியார் நிறுவனங்களின் தடுப்பூசி நன்கொடையை பினாங்கு மாநில அரசு பரிசீலிக்க தேவையில்லை எனவும்,  மத்திய அரசு ஏற்கனவே தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 24, 2021 அன்று தொடங்கிய இந்த திட்டம், நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதம் அல்லது 26.5 மில்லியன் நபர்கள் இலவசமாக தடுப்பூசி பெற இலக்கு வைத்துள்ளதாக இக்கடிதத்தில் இடம்பெறுவதாக கூறினார்.

“மத்திய அரசு கோவிட்-19 தடுப்பூசியை இலவசமாக வழங்கும் திட்டத்தின் மூலம் சமூகத்தில் கோவிட்-19 தொற்றுநோய்  சங்கிலியை உடைத்து இறுதியில் நாட்டில் கோவிட்-19 தொற்றுநோய் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு செயல்படுகிறது. 
அனைவருக்கும் சமத்துவ அணுகுமுறைக்கு ஏற்ப மலேசிய மக்களின் அனைத்து பிரிவுகளுக்கும் வழங்குவதற்கு போதுமான கோவிட்-19 தடுப்பூசியை மத்திய அரசு வாங்கியுள்ளது எனவும் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு சிலாங்கூர் மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு தடுப்பூசியை நேரடியாக வாங்குவதற்கு வாய்ப்பு வழங்கியது போல பிற மாநிலங்களுக்கு கொடுக்காததற்கு காரணம் தெரிவிக்குமாறு முதல்வர் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து விடுபட மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.