மாநில அரசின் ‘மின்-கற்றல் கணினி திட்டம்’ வசதி குறைந்த மாணவர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது

Admin

 

ஜார்ச்டவுன் – கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில் டிஜிட்டல் கற்றல்  கல்வியின் இன்றியமையாத பகுதியாக மாறியுள்ளது என்று மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் கூறினார்.

“டிஜிட்டல் முறையில் கல்வி கற்க கணினி ஒரு முக்கியமான தேவையாக மாறி வருகிறது.

“எனவே, மாணவர்கள் இணையவழி கல்வி கற்க இந்த மடிக்கணினி பேருதவியாக அமையும்”, என இன்று கொம்தாரில் நடைபெற்ற கீசைட் தொழில்நுட்ப நிறுவனம் பினாங்கு அறிவியல் கிளஸ்டர் (பி.எஸ்.சி) மையத்திற்கு ரிம150,000 நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, கீசைட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் உதவியுடன் 70 மடிக்கணினிகள் வசதி குறைந்த மாணவர்கள் வீட்டிலிருந்து இலகுவாக கல்வி கற்கும் நோக்கில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“இன்று வரை, சுமார் 1,594 மாணவர்கள் ‘மின்-கற்றல் கணினி திட்டம்’ மூலம் பயனடைந்துள்ளனர். மேலும் தனியார் நிறுவனங்கள் முன்வந்து இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டும்,” என்று சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் பேசினார்.

இதனிடையே, பினாங்கு2030 கொள்கையினை மெய்பிக்க இன்னும் அதிகமான தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பினாங்கு அறிவியல் கிளாஸ்டர் மையத்திற்கு பயன்படுத்தப்பட்ட கணினிகளை வழங்க முன்வர வேண்டும் என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கோரிக்கையை முன் வைத்தார்.

கீசைட் தொழில்நுட்பங்களின் மூத்த துணைத் தலைவர் டத்தோ கூய் சூன் சாய், மாநில அரசுடன் இத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

“இந்த முயற்சி மாணவர்கள் திறன்பட கற்க உதவும். மேலும், மாணவர்கள் கல்வியில் முன்னெடுத்துச் செல்ல இத்திட்டம் வழிவகுக்கும்.

“இந்த புதிய டிஜிட்டல் மயமாக்கல் சகாப்தத்தில் மாணவர்களுக்கு இந்த திட்டம் அத்தியாவசியம்,” என்று அவர் கூறினார்.

மேலும், அதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் தேர்ந்தெடுக்கப்பட்ட வசதிக்குறைந்த மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றார். தனித்துவாழும் தாய்மார்கள், பி40 குழுவினர், சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர் மற்றும் இதர அடிப்படையில் இம்மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றார்.

கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி அரசால் தொடங்கப்பட்ட ‘மின்-கற்றல் கணினி திட்டம்’, கணினிகள் இல்லாத ஏழை மாணவர்களுக்கு மின்-கற்றலில் பங்கேற்க உதவும் வகையில் அவர்களுக்கு உதவுவதற்காக அமல்படுத்தப்பட்டது.