மாநில அரசு எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரித்தது 

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு 2020ஆம் ஆண்டுக்கான மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) மற்றும் மலேசிய உயர்நிலைக்கல்வி சான்றிதழ் (எஸ்.டி.பி.எம்) அரசு பொதுத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற  ஐந்தாம் மற்றும் ஆறாம் படிவ மாணவர்களை அங்கீகரித்தது. 

2020ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 176 மாணவர்களும், எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 82 மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.

இரண்டாவது முறையாகப் புதிய இயல்பில் நடத்தப்படும் இந்த விருதளிப்பு விழா இரண்டாம் துணை முதல்வர்  பேராசிரியர் ப.இராமசாமி; மாநில துணை செயலாளர் (நிர்வாகம் மேலாண்மை) அமாட் ரிசால்; மாநில கல்வி இலாகாவின் துறை இயக்குநர் நடியா ஜாமாயின் பேக்கரி; பள்ளி தலையாசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற 82 மாணவர்களில் PNGK4.0 பெற்ற 62 மாணவர்களுக்கு ரிம1,000 மற்றும் நற்சான்றிதழ்; இன வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 15 மாணவர்களுக்கு ரிம1,000; சிறப்பு தேர்ச்சி பெற்று முன்னிலை வகிக்கும் 5 மாணவர்களுக்கு ரிம1,000; மற்றும் மூன்று சிறந்த அடைவுநிலை பெற்ற பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

அதேவேளையில், எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற 276 மாணவர்களில் சிறந்த மாணவர்களுக்கானப் பிரிவில் 271 மாணவர்களுக்கு ரிம1,000 மற்றும் நற்சான்றிதழ்; சிறப்பு தேர்ச்சி பெற்று முன்னிலை வகிக்கும் 5 மாணவர்களுக்கு ரிம1,000; மற்றும் மூன்று சிறந்த அடைவுநிலை பெற்ற பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தினால்  மாணவர்கள் பல  சவால்களை எதிர்கொண்ட போதிலும் வெற்றியை நோக்கி பயணிப்பதில்  பெற்றோர்களும் ஆசிரியர்களும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மாநில  முதல்வர் சாவ் கொன் யாவ் பாராட்டுத் தெரிவித்தார்.

மாணவர்களின் சிறந்த தேர்ச்சிக்கு மாநில அரசு பெருமிதம் கொள்வதாகவும் முதல்வர் கூறினார். 

“எஸ்.டி.பி.எம் பிரிவின் கீழ் ரிம82,000 மற்றும் எஸ்.பி.எம் பிரிவின் கீழ்  ரிம138,000  ஊக்கத்தொகையை மின்னனு நிதி பரிமாற்றம் (EFT)மூலம் மாணவர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் அனுப்பப்படும்,” என முதல்வர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு பள்ளிகள் கிட்டத்தட்ட 110 நாட்கள் மூடப்பட்ட வேளையில் அனைத்து மாணவர்களும் இல்லிருப்பு கற்றல் மற்றும் கற்பித்தல் (PdPR) முறையைப்  பின்பற்றி சிறந்த தேர்ச்சி பெற்றதில் பெருமைக்கொள்வதாக இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார். 

மாணவர்கள் தொழில்நுட்ப துறையில் தேர்ச்சி பெற்று, டிஜிட்டல் சகாப்தம் மற்றும் தொழில்துறை புரட்சி 4.0க்குத் தயார்படுத்த இயல்கலை கற்றல் அடித்தளமாக அமைகிறது என மேலும் தெரிவித்தார்.