மாநில அரசு தொற்றுநோய் காலத்திலும் எம்.பி.எஸ்.பி ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கிறது – முதல்வர்

 

 

 

செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழக (எ.பி.எஸ்.பி) 2020 சிறந்த சேவைக்கான விருதளிப்பு நிகழ்ச்சியில் சுமார் 272 ஊழியர்கள் கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி இன்று காலையில்
எம்.பி.எஸ்.பி மாநகர் கழக வளாகம், பாடாங் செம்படாக்  டெப்போ மற்றும் ஜாவி டெப்போ ஆகிய மூன்று இடங்களில்
ஒரே நேரத்தில் நடைபெற்றது.

பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தனது உரையில், கோவிட்-19 தொற்றுநோய்  பரவலின் போது
மக்களின் நலனுக்காக  உள்ளூர் அதிகாரிகள் (பி.பி.தி) வழங்கிய சேவையின் அர்ப்பணைப்பையும் ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

“கோவிட்-19 தாக்கம் ஏற்பட்டு ஓராண்டு காலம்  கடந்த நிலையில், அனைத்து எம்.பி.எஸ்.பி ஊழியர்களும் இப்போது புதிய இயல்புக்கு  ஏற்றவாறு பணியாற்றுகின்றனர்,” என எம்.பி.எஸ்.பி கட்டிட கெனாங்கா அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

” மேலும், விருதளிப்பு பெற்ற ஊழியர்கள், எதிர்காலத்தில் வெற்றி பெற  ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்,”என மாநில முதல்வர் சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

எம்.பி.எஸ்.பி   ‘myMBSP Apps’ செயலி பயன்பாட்டிலிருந்து பணமில்லா பரிவர்த்தனையை அறிமுகம் செய்வதன்  மூலம் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியை காண முடிகிறது. இத்திட்டம் மாநில அரசின் பினாங்கு2030 கொள்கையை மெய்பிக்கிறது. மாநில அரசு, எம்.பி.எஸ்.பி கோவிட்-19  சவாலை எதிர்கொள்ள ஆக்கபூர்வமான மற்றும் புதுமையான திட்டங்கள கையாள்வதை வரவேற்கின்றது.

“இதனிடையே, மாநில அரசு 2020 பினாங்கு மக்கள் உதவித் திட்டத்தின் கீழ் 3,086 எம்.பி.எஸ்.பி முன்னணி வீரர்களுக்கு ரிம300 உதவித்தொகை வழங்கியுள்ளது.

மேலும், எம்.பி.எஸ்.பி மேயர், டத்தோ ரோசாலி மொஹமட் பெருநிலத்தில்  சுழற்சி  மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை செயல்படுத்த தனது நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, கோவிட்-19 தாக்கத்தால் தினமும் சவால்களை எதிர்கொள்ளும் முன்னணி பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என மேயர் டத்தோ ரோசாலி தனது கோரிக்கையை முன் வைத்தார். எனினும், இதன் தொடர்பாக மாநில அரசு மத்திய அரசிடம் முன்னதாகவே  பரிந்துரையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

எம்.பி.எஸ்.பி சிறந்த சேவை 2020 விருதை பெறும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் ரிம1,000 ரொக்கப்பணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.