மாநில அரசு மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி நில விவகாரம் குறித்து பரிசீலிக்கும் – முதல்வர்

ஜார்ச்டவுன்- “மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி, அரங்கம் மற்றும் திடல் அமைந்திருக்கும் நிலத்தை அதன் பள்ளி வாரியக் குழுவிற்கு வழங்கும் செயல்பாடுகள் தொடர்ந்து துரிதப்படுத்தப்படும்.

“இந்நில விவகாரம் நில செயற்குழுவின் கீழ் பரிசீலிக்கப்படுகிறது,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் அரங்கம் கட்டிட நிதி வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

பினாங்கு மாநில அரசு ஏறக்குறைய ரிம3.5மில்லியன் நிதிச் செலவில் கட்டப்படும் இக்கட்டடத்திற்கு ரிம100,000-ஐ மானியமாக வழங்கியது.

மாநில முதல்வர் மேதகு சாவ் அப்பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ அருணாசலம் மற்றும் செயலவை உறுப்பினர்களிடம் மாதிரி காசோலையை வழங்கினார்.

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ அருணாசலம்

“இந்த அரங்க நிர்மாணிப்புப் பணிகள் 90% நிறைவுப்பெற்றதாகவும், அதனை முழுமைப் பெறச் செய்வதற்குக் கூடுதலாக ரிம1.5 மில்லியன் தேவைப்படுவதாகவும்,” அதன் கட்டிடத் தலைவர் சரவணன் இவ்வாறு தெரிவித்தார்.

மாநில அரசு கூடுதல் மானியம் வழங்க உத்தேசிப்பதாகவும் மற்ற தரப்புகளிடம் இருந்தும் மானியம் பெற முயற்சிக்குமாறும், முதல்வர் வலியுறுத்தினார்.

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி கட்டிடத் தலைவர் சரவணன்.

இந்நிகழ்ச்சியில் மாக் மண்டின் வாரியக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ அருணாசலம்; துணைத் தலைவர் சண்முகநாதன், கட்டடிடத் தலைவர் சரவணன் மற்றும் பொருளாளர் நிர்மலா கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநிலத்தின் பெரியப் தமிழ்ப்பள்ளியாக கருதப்படும் இப்பள்ளியில் ஏறக்குறைய 1,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்தப் புதிய அரங்க நிர்மாணிப்பு இப்பள்ளி மாணவர்கள் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பயன்படுத்த துணைபுரியும். அதேவேளையில், பொது மக்களும் திருமணம், விருந்தோம்பல் போன்ற சமூக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் பயன்படுத்தலாம் என சரவணன் கூறினார்.