ஜார்ச்டவுன் –மாநில வீட்டுவசதி வாரியம், மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் (பி.பி.ஆர்) கீழ் வாடகை வீடுகளுக்கு விண்ணப்பிக்கும் குடும்பங்களுக்கான வருமான வரம்பை தற்போது மறுமதிப்பாய்வு செய்து வருகிறது.
மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு, இந்த மதிப்பாய்வு சமீபத்திய வறுமைக் கோட்டுடன் அதாவது மாதத்திற்கு ரிம 2,209 என மலேசிய புள்ளியியல் துறை (DOSM) நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஒத்துப்போகிறது என்று விளக்கமளித்தார்.
“இலக்கு குழுவினர் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்கள் ஒரு வீட்டை சொந்தமாக்குவதற்கு சம வாய்ப்பு வழங்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம். பினாங்கு வாழ் மக்கள் வசதியான சூழலில் வாழ்வதை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
“மாநில வீட்டுவசதி வாரியம் பி.பி.ஆர் வீடுகள் மற்றும் வாடகை வீட்டு விண்ணப்பங்களுக்கான விதிமுறைகள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மதிப்பாய்வு செய்து வருகிறது.
“பி.பி.ஆர் வீடுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த மதிப்பாய்வு செய்யப்படுகிறது,” என்று சுங்கை புயூ சட்டமன்ற உறுப்பினர் பீ சின் தீ வாய்மொழி கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் கூறினார்.
பாகான் நாடாளுமன்றத் தொகுதியில் பி.பி.ஆர் திட்டத்தில் வாடகைக்கு வாழும் குடும்ப வருமானம் ரிம1,500க்குக் கீழ் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களின் விவரத்தை வழங்குமாறும் சட்டமன்ற உறுப்பினர் பீ மாநில அரசைக் கேட்டுக் கொண்டார்.
தற்போது, பி.பி.ஆர் வீடுகளை வாடகைக்கு எடுப்பதற்கு ஒரு மாத வருமானம் ரிம1,500க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று சுந்தராஜூ கூறினார்.
மாறாக,ஜெலுத்தோங் கோத்தா கியாமில், 500 வீடுகளை உள்ளடக்கிய புதிய பி.பி.ஆர் வீடமைப்புத் திட்டத்தை சுந்தராஜூ அறிவித்தார்.
இந்த முன்முயற்சிக்கான விண்ணப்ப விதிமுறைகள் திருமணமாகாதவர் உட்பட 21 முதல் 40 வயதுடைய இளைஞர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் பினாங்கில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருக்க வேண்டும். மேலும், மாதத்திற்கு ரிம1,500 க்கும் குறைவான குடும்ப வருமானம் பெற்றிருக்க வேண்டும்.
மக்களுக்கு சிறந்த வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வழங்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை சுந்தராஜு வலியுறுத்தினார்.
சுந்தராஜூவின் கூற்றுப்படி, பாகானில் தற்போது 422 பேர் வீட்டு வாடகைக்கு உள்ளனர். அவர்களின் குடும்ப வருமானம் ரிம1,500 க்கும் குறைவாக உள்ளது. மேலும், 41 வீட்டு வாடகைக்கு உள்ளவர்கள் குடும்ப வருமானம் ரிம1,500-க்கும் அதிகமாகப் பெறுகின்றனர்.
மேலும் ஒரு துணைக் கேள்வியில், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் பினாங்கில் உள்ள பி.பி.ஆர் வீடமைப்புகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் குடியிருப்பாளர்களின் நிதியைப் பிரதிபலிக்காத சொகுசு கார்களால் நிரப்பப்பட்டிருப்பதால், அவர்கள் வருமானத்தை துல்லியமாக மதிப்பிடுகிறார்களா என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு மாநில வீட்டுவசதி வாரியத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த சுந்தராஜு, “வெள்ளை மற்றும் கருப்பு இரண்டும் நிறம்தான். அதே போல நல்லவர்கள் இருந்தால் கெட்டவர்களும் இருப்பர்.”
“விண்ணப்பச் செயல்பாட்டில், விண்ணப்பதாரர்களின் நிதி நிலையை தீர்மானிக்க சம்பளம், சேமநிதி வாரிய அறிக்கைகள் மற்றும் வருமான வரி ஆவணங்கள் பரிசீலிக்கப்படும், என அவர் மேலும் விளக்கினார்.
“வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் பொதுவாக பி.பி.ஆர் வீடுகளில் வாடகைக்கு மூன்று ஆண்டுகள் தங்க அனுமதிக்கப்படுவர். அதே நேரத்தில், அவர்கள் வாடகைக்கு மற்றும் சொந்தமாக அல்லது தங்கள் சொந்த சொத்துக்களை வாங்குவதற்குப் போதுமான அளவு சம்பாதிப்பார்கள் என்று நம்புகிறோம். விண்ணப்பதாரர்கள் பி.பி.ஆர்-க்குச் செல்வதற்கு முன் ஏழைகளாக இருந்தபோதும், மூன்று வருடங்கள் கடக்கும் முன்பே கார்களை சொந்தமாக வைத்திருக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன,” என மேலும் அவர் விளக்கமளித்தார்.