முறையான நெறிகளை பின்பற்றி தைப்பூசத்தை கொண்டாடுவோம் – பேராசிரியர்.

Admin

தஞ்சோங் பூங்கா – மலேசிய பினாங்கு இந்துதர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் தர்ம வேல் திட்டம் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. வருகின்ற 21 ஜனவரி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச கொண்டாட்டத்தில் பக்தகோடிகள் முறையான பால்குடமும் மற்றும் காவடி நேர்த்திகடன்களை முருகப்பெருமானுக்கு செலுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தர்மவேல் நிகழ்வில் பேராசிரியர் ப.இராமசாமி பேருரை நிகழ்த்தினார்.

இந்த ஆன்மீக பேருரையில் பினாங்கு இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி, பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ இராமசந்திரன், அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் டத்தோ சுப்பிரமணியம், மலேசிய பினாங்கு இந்துதர்ம மாமன்ற தலைவர் தர்மசிகாமணி நந்தகுமார் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பக்தகோடிகள் தம் வேண்டுதல்களான பால்குடம் மற்றும் காவடி நேர்த்திகடனை எவ்வாறு விரதம் மேற்கொண்டு முறைப்படி செலுத்துவது போன்ற விளக்கங்களை சிவஶ்ரீ அ.ப முத்துகுமார சிவாச்சாரியார் வருகையளித்திருந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக பேருரை வழங்கினார்.

நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மலேசிய பினாங்கு இந்துதர்ம மாமன்ற தலைவர் தர்மசிகாமணி நந்தகுமார் இந்து அறப்பணி வாரியம் சிறப்பாக செயல்பட்டு வருவதைப் பாராட்டினார். இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் ஆன்மீக நிகழ்வுகள், கல்வி சார்ந்த நிகழ்வுகள் மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாட்டு செய்து வருவதை தமதுரையில் குறிப்பிட்டார்.

மேலும், பொதுமக்கள் தனக்கென்று ஒருவழியை பின்பற்றாமல் வகுத்து வைக்கப்பட்டுள்ள ஆகம விதிப்படி தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்த வெலுத்துமாற் தமதுரையில் கேட்டுக்கொண்டார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர்.
நேர்த்திகடன்களை எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதனை அறிந்துக்கொண்டு பக்தகோடிகள் செயல்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே, பினாங்கு இந்து அகடமி முயற்சியில் நம் நாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்பட்டு வருவதையும் தமதுரையில் குறிப்பிட்டார் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.

நம் நாட்டில் இந்தியாவில் இருந்து அர்ச்சகர்களைக் கொண்டுவர ஆலய நிர்வாகங்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் நோக்கில் இம்மாதிரியான அர்ச்சகர் பயிற்சி நடத்தப்படுகின்றது. நம் நாட்டிலேயே சிறந்த அர்ச்சகர்களை நாம் உருவாக்க முடியும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார். திருவிழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற பெரிய சமய நிகழ்வுகளுக்கு இந்தியாவில் இருந்து அர்ச்சகர்களை கொண்டுவருவதை நிறுத்தி இங்குள்ள இளைஞர்களுக்கு வேத ஞானங்களை கற்பித்து இந்நிகழ்வுகளை வழிநடத்தவே பினாங்கு இந்து அகடமி உருவாக்கப்பட்டுள்ளதையும் தமதுரையில் குறிப்பிட்டார்.