பிறை – தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில், பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கிய நிகழ்ச்சிக்கு ரிம20,000 நிதியுதவி வழங்கினார்.

மொழியும் இலக்கியமும் ஓர் இனத்தின் அடையாளமாகவும் முகவரியாகவும் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ் சமூகத்தின் வாழ்வியலையும் உணர்வுகளையும் எழுத்துகளின் வாயிலாகப் பதிவுசெய்யும் எழுத்தாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, என்றார்.

பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் செ. குணாளன் தலைமையில் பிறை, பெர்ல் வியூ தங்கும் விடுதியில் நடைபெற்ற குறுங்கதைப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ்ச் சமூகத்திற்கு அதிகமான சேவைகளை ஆற்ற வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட டத்தோஸ்ரீ சுந்தராஜு, எழுத்தாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களின் இலக்கியப் பணிகளுக்கு ஆதரவளிப்பதும் சிறந்த சேவையாக அமையும், என்றார்.
மேலும், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அதிகமான இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், அவற்றுக்கு மாநில அரசாங்கத்தின் சார்பில் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

டாக்டர் சின்னையா, டத்தோஸ்ரீ புலவேந்திரன், டத்தோ மரியதாஸ் கோபால் உள்ளிட்ட கொடையாளர்களும் இத்தகைய இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மொழி என்பது வெறும் தொடர்பு கருவி மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் பாரம்பரியம், அடையாளம் மற்றும் நாகரிகத்தைப் பிரதிபலிப்பதாகும் என்று கூறிய அவர், எழுத்துகள் தலைமுறைகளை இணைக்கும் பாலமாக விளங்குவதுடன், சிந்தனையை வளப்படுத்தவும் நற்பண்புகளை வளர்க்கவும் அறிவு மற்றும் பண்பாட்டுக் கருவூலங்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன, என்றார்.
இதற்கிடையே, பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 65 ஆண்டுகளாக மாநிலத்தில் இலக்கியச் சேவையாற்றி வருவதாக அதன் தலைவர் செ. குணாளன் தமது தலைமையுரையில் தெரிவித்தார்.
இலக்கியப் போட்டிகள் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்தாலும், பரிசுகளை வெல்வதைவிட இலக்கியம் படைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் எழுதுவதே முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். எழுத்தாளர்களின் படைப்புகள் தரத்திலும் சிந்தனையிலும் உயர்ந்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விழாவில், குறுங்கதைப் போட்டிக்குக் கிடைத்த படைப்புகளின் கதைக்களங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து சங்கத்தின் துணைத் தலைவர் திருமாமணி திருவரசு ஆய்வுசெய்து விளக்கமளித்தார். சங்கத்தின் செயலாளர் ம. மகேஸ்வரி வரவேற்புரையாற்றினார்.
இப்போட்டியில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற எழுத்தாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சங்கத்தின் நீண்டகால உறுப்பினர் குமாரி எம். ஜெயலட்சுமிக்கு ‘இலக்கியச் செம்மல்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மாநில அரசாங்கத்திடமிருந்து ‘டத்தோ’ விருது பெற்ற முன்னாள் தலைமையாசிரியர் வீராசாமி அண்ணாமலைக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் பேராசிரியர் டாக்டர் அஜேந்திரன் ஆறுமுகம், மேஜர் அட்ணன், ஐ.பி.எஃப். குமரேசன், பினாங்கு கல்வி இலாகாவைச் சேர்ந்த லோகநாதன் மணியம், டத்தோ கரு. இராஜமாணிக்கம், மு.வி. மதியழகன் உள்ளிட்டோரும், 200-க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இளைய தலைமுறையினர் தாய்மொழியை நேசித்து இலக்கியப் படைப்புகளை உருவாக்குவதுடன், எழுத்தை அறிவைப் பகிரும் கருவியாகவும் சிந்தனையை வளர்க்கும் வழியாகவும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் ஊடகமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ சுந்தரராஜு கேட்டுக்கொண்டார்.
இப்போட்டியில் ‘ஸ்ரீபாதம்’ என்ற குறுங்கதைக்காக ராமு ராஜனோரன் முதல் பரிசையும், ‘காத்திருப்பின் பெயர் ஊர்மிளை’ என்ற குறுங்கதைக்காக காந்தாரம் லோகநாதன் இரண்டாம் பரிசையும், ‘கடைசித் திருவிழா’ என்ற குறுங்கதைக்காக கலைச்செல்வன் கோணசேகரன் மூன்றாம் பரிசையும் வென்றனர்.