லெபோ விக்டோரியாவில் போத்தல் மறுசுழற்சி கடை

கண்ணாடி போத்தல் மறுசுழற்சி பினாங்கில் இன்னும் உள்ளது என்பதை நம்மில் பலருக்கு தெரியாது. அத்தகைய முகவர்கள் இருப்பதை பெரும்பாலும் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

“அந்த காலங்களில் மக்கள் அக்கம் பக்கத்தில் போத்தல்கள் சேகரிக்கச் செல்வர், ஆனால் இப்போது அவர்களை காண்பது அரிதாகிவிட்டது,’’ என்று கே.பரமசிவம் தனது தொழில்பேட்டையில் அண்மையில் முத்திச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

66 வயது நிரம்பிய அவர் போத்தல் மறுசுழற்சி ஒரு ஆளுமையான வியாபாரம் என்றும் இத்தொழில் மிகவும் கடினமானது என கூறினார். தனது வணிகத்தின் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, பரமசிவம் தனது பாரம்பரியத்தைத் தொடர எதிர்க்காலத்தில் யாரேனும் இருப்பார்களா என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தினர்.

பரமசிவத்தின் கூற்றுப்படி, அவரது கடை 1926-ஆம் ஆண்டில் அவரது உறவினர்களால் நிறுவப்பட்டது, அவர் தனது 55 வயதில் ஓய்வு பெற்ற பிறகு 2013-ஆம் ஆண்டு இவ்வணிகத்தை தனது உறவினரிடம் இருந்து பெற்றுக் கொண்டு வியாபாரத்தை தொடர்ந்தார்.

“70-களில் நான் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, ஒரு தொழிற்சாலையில் வேலை கிடைப்பதற்கு முன்பு சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ‘ஸ்கிராப்’ தொழிலில் பணியாற்றினேன்.

“அங்கு, நான் ஒரு தயாரிப்பு மேலாளராக மாறுவதற்கு முன்பு ஒரு தயாரிப்பு தொழிலாளியாக இருந்தேன். நான் 34 ஆண்டுகளாக தொழிற்சாலையில் பணியாற்றினேன்.

“நான் பணி ஓய்வு பெற்றதும், இத்தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன். எனது குழந்தைகள் இன்னும் படித்துக்கொண்டிருப்பதால் வருமானம் ஈட்ட விரும்பினேன்,” என்றார்.

பரமசிவம் தனது பயன்படுத்தப்பட்ட போத்தல்கள் 90 சதவீதத்தை தாய்லாந்திலிருந்து பெறுவதாகக் கூறினார். ஏனெனில், ஒரு சில உள்ளூர் மக்கள் மட்டுமே அவர்கள் பயன்படுத்திய போத்தல்களை தனது கடைக்கு அனுப்புகிறார்கள்.

“என்னைப் போன்ற போத்தல் சேகரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது பெரும்பாலான உள்ளூர்வாசிகளுக்குத் தெரியாது. அருகில் இருப்பவர்கள் மட்டுமே வந்து தங்கள் போத்தல்களை சேகரித்து மறுபயனீட்டுக்கு வழங்குகின்றனர்.

“முன்னதாக, அந்த பகுதியில் இந்த வியாபாரத்தைச் செய்யும் ஐந்து கடைகள் இருந்தன, ஆனால் குறிப்பிடத்தக்க அளவு போத்தல்கள் கிடைக்கப்பெறாத காரணமாக அவை மூடப்பட்டன.

“பிளாஸ்டிக் போத்தல்களின் பயன்பாட்டின் அதிகரிப்பு மற்றொரு காரணியாகும். அதிர்ஷ்டவசமாக, இந்த துறையில் எனக்கு சில நல்ல நண்பர்கள் உள்ளனர், அவர்கள் எனக்கு பொருட்களைப் பெற உதவுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

தனது சேகரிப்புப் போத்தல்களை அதன் வகைக்கு ஏற்ப பிரிப்பதில் அவர் கைத்தேர்ந்தவர்.

“நான் ஒரு தனிநபராக இருந்து இவ்வியாபாரத்தை இயக்குகிறேன், நான் உருவாக்கும் வருமானத்துடன், கூடுதல் ஆட்களை வேலைக்கு அமர்த்துவது எனக்கு கடினமாக இருக்கும்.

“மறுபயனீடு செய்யப்படும் போத்தல்களின் விலை அதன் அளவு மற்றும் தேவையைப் பொறுத்தது. இது மூன்று முதல் 15 சென்களுக்கு வாங்கப்படும்.

“கிடைக்கப்பெற்ற போத்தல்களை ஒரு துப்புரவு பணிக்காக அனுப்புவேன், அதன் பிறகு ‘சில்லி சாஸ்’ மற்றும் மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற உற்பத்தியாளர்களுக்கு அனுப்புவேன்” என்று பரமசிவம் கூறினார்.

பரமசிவம் இந்த பாரம்பரியத் தொழிலை தொடர ஆர்வமுள்ள எவருக்கும் இவ்வணிகத்தை ஒப்படைக்க தயாராக இருப்பதாகக் கூறினார்.

லெபோ விக்டோரியாவில் அமைந்துள்ள மறுசுழற்சி கடை

“இந்த போத்தல் மறுபயனீட்டு தொழிலை தொடர யாரும் இல்லை என்றால், நான் இத்தொழிலில் ‘கடைசி மனிதனாக’ இருப்பேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

விக்டோரியா தெருவில் சிறிய கடையாக தோற்றமளிக்கும் டி.எம்.ஐ திரேடர்ஸ் என்று அழைக்கப்படும் பரமசிவத்தின் கடை ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.

பயன்படுத்திய போத்தல்களை மறுபயனீடு செய்ய அனுப்ப விரும்புவோர் 101-159, லெபு விக்டோரியா, ஜார்ச்டவுன், 10300 ஜார்ச்டவுன், பினாங்கு (கூகுள் வரைபட இருப்பிடக் குறியீடு: C86P + XW ஜார்ச்டவுன், பினாங்கு) என்ற கடைக்கு வருகை அளிக்கலாம்.