வீட்டுவசதி வாரியத்தின் முதல் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கும் – ஜெக்டிப்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்தின் கீழ் முதல் முறையாக பாயான் பாரு, புக்கிட் கெடுங்கிற்கு அருகில்
செயல்படுத்தப்படும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட  மேம்பாட்டுத் திட்டம் (ஆர்.எம்.எம்) தற்போது திறந்த குத்தகை மூலம் ஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

வீட்டுவசதி, உள்ளூராட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தற்போது நில அளவீட்டு பணி  நிறைவுப்பெற்றது எனவும் திறந்த குத்தகை மூலம் முன்மொழிவு விண்ணப்ப ஆலோசனை (ஆர்.எஃப்.பி) இந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் ஒரு மாத காலத்திற்கு திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

2021  டிசம்பர் மாதத்தில் தகுதியான மேம்பாட்டாளர்களுக்கு கட்டுமானப் பணிக்கான குத்தகை வழங்கப்படும்.

“புக்கிட் கெடுங் பிரதான திட்டத்தில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட 700 சதுர அடி பரப்பளவு கொண்ட 253 வீடுகள் (பிரிவு பி) மற்றும்  ரிம300,000-க்குள் 1,014  வீடுகள் (பிரிவு சி3) ஆகியவை  7.6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும்.

“இந்த எல்.பி.என்.பி.பி புக்கிட் கெடுங் திட்டத்தில் 21 மூன்று மாடி வணிக கட்டிடங்கள் உட்பட பல்வேறு உபகரணங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்படும்,” என்று எல்.பி.என்.பி.பி வாரியத்தின் தலைவருமான ஜெக்டிப் விவரித்தார்.

ஜெக்டிப்பின் கூற்றுப்படி, பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களிலும் எல்.பி.என்.பி.பி அடையாளம் காணப்பட்ட 10 திட்டங்களில் இத்திட்டம் பிரதான திட்டமாக விளங்குகிறது.

எல்.பி.என்.பி.பி இன் கீழ் உள்ள 10 வாங்கும் சக்திக்கு உட்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் மொத்தம் 20,912 யூனிட் வீடுகள் அமைக்கப்படும்.

பினாங்கு மக்களுக்காக வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் கட்டுவதற்கு மாநில அரசு தொடர்ந்து அதன் பணியில் ஈடுபடும். மேலும், 2030-க்குள் 220,000 யூனிட் வீடுகள் வரை நிர்மாணிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக ஜெக்டிப், பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) மேயர் டத்தோ இயூ துங் சியாங்  மற்றும் வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏ.சி.பி சோபியன் சாண்டோங்
பண்டாராயா அரங்கத்தில் நடைபெறும் பினாங்கு கோவிட்-19 பரிசோதனை திட்டத்தை (பி.எஸ்.சி 19) பார்வையிட்டனர்.

முதல் இரண்டு வாரங்களுக்கு பதிவுச் செய்த  8,000 பேரில் 6,603 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 151 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதியானது. இவர்கள் இரண்டாம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 81 பேருக்கு தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது, என்றார்.

“இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் தொற்று காணப்படும் நபரை தனிமைப்படுத்தி அது பிறருக்கு பரவும் அபாயத்தை குறைக்க துணைபுரிகிறது. இது தனிநபர், குடும்பம் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிபடுத்த முடிகிறது,” என ஜெக்டிப் வலியுறுத்தினார்.