அதிகாரிகள் வசந்தபிரியா வழக்கை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் – முதல்வர்

Admin
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் வசந்தபிரியா குடுபத்தினருக்கு சிறு உதவித்தொகையாக ரிம3,000 வழங்கினார்.

கல்வி துணை அமைச்சர் டத்தோ கமலநாதன் வெளியிட்ட ஆதரமற்ற தகவல்களால் அண்மையில் மரணமடைந்த வசந்தபிரியாவின் குடும்பத்தினருக்கு வருத்தத்தை அளிப்பதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் 14 வயது நிரம்பிய பள்ளி மாணவி என்பதால் அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் கையாளுமாறுக் கேட்டுக்கொண்டார்.

கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை பொறுப்பற்றதாகவும் கொடூரமானதாகவும் விளங்குகிறது. அதிகாரத்துவப் பதவியில் இருக்கும் கல்வி அமைச்சர் எவ்வாறு இம்மாதிரியான அறிக்கையை பொதுத் தரப்பில் வெளியிட முடியும்? “ என கண்டனம் தெரிவித்தார்.

எனவே, இம்மாதிரியான வழக்குகளைச் சிறந்த முறையில் கையாளும் பொருட்டு கல்வி துணை அமைச்சர் டத்தோ கமலநாதன் நெறியுரை அமர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்என மேலும் தெரிவித்தார்.

வசந்தபிரியா குடும்பத்தினர் அமைச்சரின் அறிக்கையை முற்றிலும் உண்மையல்ல என சாடினர்.

நவீன தொலைப்பேசியைத் (iPhone) திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு தற்கொலை மேற்கொண்ட பள்ளி மாணவி வசந்தபிரியா கடந்த1/2/2018- ஆம் நாள் செபராங் ஜெயா அரசு மருத்துவமனை அவசரப் பிரிவில் மூச்சு திணறல் காரணமாக அகால மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் வசந்தபிரியாவை பிரிந்து துயரும் குடுபத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொண்டு, சிறு உதவித்தொகையாக ரிம3,000 வழங்கினார்

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இந்த வழக்குத் தொடர்பாக காவல்துறை மற்றும் கல்வி அமைச்சு விசாரணை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதேவேளையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வசந்தபிரியாவை பற்றிய அவதூறான தகவல்கள் வெளியிடுவது பொறுப்பற்ற மற்றும் அனுதாபமற்ற செயலாகக் கருதுவதாகக் கூறினார்.

இந்நிகழ்வில் வசந்தபிரியாவின் குடும்பத்தினர் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு டேவிட் மார்ஷல் மற்றும் சத்திஸ் முனியாண்டி கலந்து கொண்டனர்.