அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இத்திருவிழா ஆதிப்பராசக்தியின் அம்சமான வீரத்தைக் குறிக்கும் அன்னை துர்க்கை, செல்வத்தைக் குறிக்கும் அன்னை லட்சுமி, கல்வியைக் குறிக்கும் அன்னை சரஸ்வதி ஆகியோருக்குத் தொடர்ந்து 9 நாட்களுக்குப் பூஜை நடைபெறும். அவ்வகையில், இந்த ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 9 நாட்களும் பூஜைகள், தேவாரம், பரதநாட்டியம் மற்றும் அன்னதானத்துடன் இனிதே நிறைவடையும்.

நவராத்திரி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்
நவராத்திரி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்

நவராத்திரியை அடுத்து வரும் 10-வது நாள் விஜயதசமி என்று அழைப்பர். இத்தினத்தன்று பிரமதேவனிடம் வரம்பெற்று தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்திய மகிசாசூரனை அன்னை ஆதிப்பராசக்தி சண்டிகா தேவியாக அவதாரம் எடுத்து வதம் செய்யும் நாளே விஜயதசமி  என்று அழைக்கப்படுகிறது.  விஜயதசமி தினத்தை பக்தர்களுக்கு நினைவுக்கூறும் வகையில் இந்த ஆலயத்தில் நாடகமாக நடத்தப்பட்டது. விஜயதசமி தினத்தைத் தொடர்ந்து மறுநாள் காமாட்சி அம்மனின் இரத ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த இரத ஊர்வலத்தில் பினாங்கு வாழ் பக்தர்கள் அன்னை காமாட்சியின் ஆசிர்வாதம் பெற்றனர்.

அருள்மிகு காமாட்சி அம்மன்
அருள்மிகு காமாட்சி அம்மன்

13-வது நாளன்று பக்தர்கள் அனைவரும் பால் குடம் ஏந்தி தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அதோடு, ஆலய நிர்வாகத்தினர் செசாயிர் காப்பகத்திலிருந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவை அன்னதானமாக வழங்கினர். இந்த ஆலய நிர்வாகத்தினர் இறை வழிபாடு மட்டுமின்றி சமூக தொண்டுள்ளம் கொண்டவர்கள் என மெய்பிக்கப்படுகிறது.

இந்த அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம் 1900-ஆம் ஆண்டு துவக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழாவாக நவாராத்திரி விழாக் கொண்டாடப்படுவதாக ஆலயத் தலைவர் திரு குமரேசன் தெரிவித்தார். நூற்றாண்டு கடந்த இந்த ஆலயம் பல திருப்பணிகளுக்குப் பின் பினாங்கு மாநில மையப்பகுதியில் சிறப்பித்து வருகின்றது.