ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில இந்தியச் சமூகத்தினருக்கான நலத்திட்டங்களும் சமூக மேம்பாட்டு முயற்சிகளும் மேலும் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, மாநில அரசாங்கம் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கான (PHEB) நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பினாங்கு மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில், பினாங்கு மாநில ஆளுநரின் ரம்லி ங்கா தாலிப் அவர்களின் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் பேசினார்.
அவர் கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் பினாங்கு முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள் பயனடையும் வகையில், பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் (PHEB) மொத்தம் ரிம1.2 மில்லியன் நிதியுதவியை வழங்கியுள்ளது, என்றார்.

கூடுதலாக, பினாங்கில் உள்ள இந்திய சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக பல்வேறு சமூக அடிப்படையிலான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, அந்த வாரியம் ஆண்டுதோறும் ரிம2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பெறுகிறது. இருப்பினும், அதில் சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, என்றார்.
எனவே, இந்திய மக்களின் நலனுக்காக கல்வி, நலன் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கூடுதல் முன்னெடுப்புகளை செயல்படுத்தும் வகையில், மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதைக் கருத்தில் கொள்ளும் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்து அறப்பணி வாரியம் மாநிலத்தில் உள்ள இந்து ஆலயங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பையும் மேற்கொள்கிறது. மேலும், குறைந்த வருமானக் குடும்பங்கள், முதியோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இலக்கு குழுவினருக்கும் உதவிகள் வழங்குவதுடன் சமூக நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அண்மையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) சிறுநீரக நோயாளிகளுக்காக டயாலிசிஸ் உதவித் திட்டங்களை வழங்கி, குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகளின் மருத்துவச் சுமையை குறைக்க முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாநில அரசு விளையாட்டு மேம்பாடு குறித்துப் பேசிய குமரேசன், ‘இளைஞர் கேடயம் மற்றும் ஆளுநர் கேடயம்’ போட்டிகளில் பங்கேற்பதற்காக, பினாங்கு காற்பந்து சங்கத்துடன் (FAP) இணைந்து ரிம500,000 வரையிலான செலவில் மேற்கொள்ளப்பட்ட அடிமட்ட காற்பந்து முன்னெடுப்புகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
‘சேலஞ்ச்’ கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பினாங்கு காற்பந்து அணிக்கும் நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.
“இருப்பினும், இளம் வீரர் மேம்பாடு, பயிற்சி வசதிகள், தொழில்முறை மேலாண்மை, விளையாட்டு அறிவியல் மற்றும் அடிமட்ட லீக் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்களும் மேம்பாடுகளும் தொடர வேண்டும், என கேட்டுக் கொண்டார்.
“மலேசிய காற்பந்தில் பினாங்குக்கு ஒரு பெருமைமிக்க வரலாறு உண்டு, மேலும் நாட்டின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக மீண்டும் உருவெடுக்கும் திறன் உள்ளது,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.