இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புப் பணியை உடனே தொடங்குக – மாண்புமிகு ஜெக்டிப் சிங் டியோ

Admin

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பினாங்கு ஜாலான் ஸ்காட்லனில் அமையப்பெற்றுள்ள இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டடத்தைக் கொண்டிருப்பதாகப் பொதுப் பணி இலாகா அறிவித்திருந்தது. இதற்கிடையில் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் இப்பள்ளியைப் புதுபிக்கும் மேம்பாட்டுப் பணியை 3.5 மில்லியன் ரிங்கிட் பொருட்செலவில் மேற்கொள்ளவிருப்பதாகத் தேசிய முன்னணி தரப்பினர் உறுதியளித்திருந்தனர். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அத்திட்டத்தை உடனே மேற்கொள்ளும்படி மாநில வீடமைப்பு மற்றும் நகரப் பெருந்திட்டத் துறையின் ஆட்சிக் குழு உறுப்பினரும் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவருடன்  கெபூன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சியா கா பெங், ஸ்ரீ இராமகிருஷ்ணா ஆசிரமத்தின் இடைக்காலத் தலைவர் டாக்டர் ஆ.சுப்பிரமணியம் உடனிருந்தனர்.

ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் மற்றும் கெபூன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் சியா கா பெங் மோசமான நிலையில் இருக்கும் பள்ளியின் கூரைப் பகுதியைக் காட்டி நிற்கின்றனர்.
ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் மற்றும் கெபூன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் சியா கா பெங் மோசமான நிலையில் இருக்கும் பள்ளியின் கூரைப் பகுதியைக் காட்டி நிற்கின்றனர்.

ஏறக்குறைய 380 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியின் கூரைப்பகுதி இடிந்து விழும் அளவிற்கு பழமையும் பாதிப்பும் அடைந்திருப்பதால் புதிய கட்டடம் நிர்மாணிக்கும் வரை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் கல்வி கற்க அப்பள்ளி மண்டபத்தில் தற்காலிக வகுப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. அவ்வகுப்புகளைப் பார்வையிட்ட ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ மாணவர்கள் மிகவும் வெப்பமான ஒரு சூழ்நிலையில் கல்வி பயின்று வருவதைக் கண்டு மிகவும் வருத்தம் தெரிவித்தார். சாலரங்கள் குறைவாக உள்ள அவ்வகுப்பறைகள் வசதி குறைந்த நிலையில் காணப்பட்டன. எனவே, மாணவர்களின் கல்வி வளர்ச்சியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இக்கட்டுமானப் பணி உடனே தொடங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதோடு மட்டுமல்லாமல், தேசிய முன்னணி தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையில் இப்பள்ளி மத்திய அரசின் நிதியாதரவோடு மேம்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்ததையும் அதன் கையேட்டையும் ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டினார். இது வெறும் வெற்று வாக்குறுதியாகிவிடக்கூடாதென்றும் திரு ஜெக்டிப் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

பாதுகாப்பற்ற பள்ளியின் மேற்பகுதியைக் காணலாம்
பாதுகாப்பற்ற பள்ளியின் மேற்பகுதியைக் காணலாம்

இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் 3 மாடி கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி ஒன்பது மாதக் காலத்தில் கட்டட நிர்மாணிப்புப் பணிகள் நிறைவடைந்துவிடும் என்று கடந்தாண்டு பொதுப் பணி இலாகாவுடன் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் அதன் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளதாக ஆசிரமத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்பள்ளிக்குப் புதிய கட்டடம் அமைப்பதற்கான குத்தகையாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் காலம் தாழ்த்துவது மாணவர்களின் கற்றல் சூழலுக்கு ஊறு விளைவிக்கக்கூடியதாய் அமைகிறது என அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், அதிகமான இந்திய மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேருவதற்கு இக்கட்டட நிர்மாணிப்பு மிகவும் அவசியமாகிறது என்றும் கருத்துரைத்தார். இவ்வாண்டில் பதிவுக்கு வந்த பல மாணவர்கள் பள்ளியின் சூழ்நிலையைக் காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளதையும் அவர் வருத்தத்துடன் சுட்டிக் காட்டினார்.

பள்ளி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வகுப்பறையில் பயிலும் நம் மாணவர்கள்
பள்ளி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வகுப்பறையில் பயிலும் நம் மாணவர்கள்

எனவேதான், மத்திய அரசு இப்பள்ளியின் கட்டட நிர்மாணிப்பை உடனடியாகத் தொடங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்திரு கர்ப்பால் சிங் புதல்வருமான திரு ஜெக்டிப் சிங் வலியுறுத்தினார். தேசிய முன்னணியின் வாக்குறுதி நம் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.