இளைஞர்களிடையே சமையலில் ஆர்வத்தை ஊக்குவிப்போம் – சூன் லிப் சீ

இளைஞர்களிடையே சமையல் மீதான ஆர்வத்தை தூண்டும் முயற்சியில், பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் (பி.ஒய்.டி.சி)இன்று ஒரு சமையல் பட்டறை ஏற்பாடு செய்துள்ளது.

இது கெபாலா பத்தாஸ் அமைந்துள்ள தியோங் ஹுவா விளையாட்டு மற்றும் கலை கழகத்தில் அரை நாள் பட்டறையாக நடைபெற்றது.

இந்த பட்டறை பினாங்கு சமையல்காரர்கள் சங்கம் மற்றும் முதலமைச்சரின் சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடைபெற்றது என்றால் மிகையாகாது.

இந்த பட்டறையில் கலந்து கொண்ட 30 பங்கேற்பாளர்களுக்கும் அச்சங்கத்தின் ஐந்து சமையல்காரர்களால்
சமையல் நுணுக்கங்கள்
கற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ துவக்கி வைத்து இது இக்கழகம் ஏற்பாடு செய்த சமையல் பட்டறையின் இரண்டாவது பதிப்பு என்று கூறினார்.

“ஆகஸ்ட் 9-ஆம் தேதி பெனாகாவில் நடைபெற்ற முதல் பதிப்பில் 30 இளம் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை நல்கினர்.

“இன்னும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளலாம்; ஆனால் தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக எண்ணிக்கையை குறைக்க வேண்டியது அவசியமாகிறது.

“இப்பட்டறையில் பங்கேற்பாளர்கள் எப்படி சமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதும், அதே நேரத்தில் சமைப்பதில் அவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதும் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது,” என்று சூன் லிப் சீ கூறினார்.

” இதனிடையே, மற்ற தொகுதிகளில் தொடர்ந்து பட்டறை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். விரைவில் இப்பட்டறையை பெர்தாமில் நடைபெறும், ” என்று பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகத் தலைவர் சூன் குறிப்பிட்டார்.

அடுத்த சமையல் பட்டறையில் சேர ஆர்வமுள்ளவர்கள் பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழக அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் அல்லது https://pydc.com.my/ என்ற இணையதளத்தை அணுகி பதிவு செய்து கூடுதல் தகவல்களைப் பெறலாம். முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இப்பட்டறையில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள் அழைக்கப்படுகின்றனர்.