பொது மக்கள் பழுதுபார்க்கும் மின் தூக்கிகளை கவனத்துடன் பராமரிப்பீர்- ஜெக்டிப்

Admin

சுங்கை பினாங்கு – முத்தியாரா ஹைட் அடுக்குமாடி தனியார் குடியிருப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மின் தூக்கி பிரச்சனையால் அவுதியுற்று வந்த மக்களின் பிரச்சனை விரைவில் தீர்வுக்காணும் என உள்ளூர் அரசு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற & கிராமப்புற நல்வாழ்வு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ குறிப்பிட்டார்.

இந்த குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் 10 மின் தூக்கிகள் பழுதுபார்க்கும் திட்டத்தை இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

பினாங்கு பராமரிப்பு நிதியம் 80 (TPM80PP) திட்டத்தின் கீழ் இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு ரிம248000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ள வேளையில் எஞ்சிய 20விழுக்காட்டை (ரிம 62,000) அக்குடியிருப்பு மக்கள் செலுத்துவர்.

இம்மின் தூக்கி பழுதுப்பார்க்கும் திட்டத்தில் ரிம310000 நிதி செலவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக ஜெக்டிப் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார்.

மேலும், குடியிருப்பு நிர்வாக வாரியத்தின் ‘தற்காலிக நிர்வாக முகவர்’ இந்த 20விழுக்காடு நிதியினை செலுத்துவர்.

“இது மெகா மின் தூக்கி பழுதுபார்க்கும் திட்டமாக அமையலாம்.

“அனைத்து குடியிருப்பாளர்களும் பழுதுபார்க்கப்படும் மின் தூக்கி மற்றும் அனைத்து பொது வசதிகளையும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கி பராமரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக,” டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் அக்குடியிருப்பு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சுமார் 1,075 குடும்பங்கள் இந்த மின் தூக்கி பழுது பார்க்கும் திட்டத்தில் பயனடைவர் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இந்நிகழ்வில் சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், மாநில வீடமைப்பு அலுவலக அதிகாரிகள், முத்தியாரா ஹைட் மக்கள் கழகத் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதனிடையே, 2008 முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை பினாங்கு மாநில அரசு மாநில மற்றும் தனியார் வீடமைப்புப் பராமரிப்பு திட்டங்களுக்காக ஏறக்குறைய ரிம256.86 மில்லியன் செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரிக்க 180,000 யூனிட் மலிவுவிலை மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் வழங்குவதற்கான இலக்கு மேம்படுத்தப்படலாம் என்று ஜெக்டிப் கூறினார்.

‘தற்போது கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் பொது மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது.

எனவே, குறைந்த மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகள் மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் நிர்மாணிப்பதில் சர்ச்சைக்குரிய சூழல் ஏற்படும் நிலையில், அவ்வீடுகளை மேம்பாட்டாளர்கள் ரிம1 மில்லியனுக்கு விற்றால் அதனை யார் வாங்க முன் வருவர்”, என ஜெக்டிப் கேள்வி எழுப்பினார்.

“எனவே, நான் மாநில முதல்வர் சாவ் கொன் யாவிடன் கலந்துரையாடியதில், அவரும் மலிவு விலை மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் திட்டம் செயலாக்கம் குறித்து
ஒப்புதல் தெரிவித்தார்.

பினாங்கு வீட்டுவசதித் துறையை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பதில் உத்வேகம் காட்டும் என செய்தியாளர்களின் கேள்விக்கு ஜெக்டிப் இவ்வாறு விளக்கமளித்தார்.