உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்குத் தீபாவளி விருந்துபசரிப்பு

மை பூசி முகத்தை அலங்கரித்து,

டை கட்டி ஆடை உடுத்தி,

பை நிறைய தீபாவளி மொய்ப் பணத்தைச் சுமந்து,

கை நிறைய மாத்தாப்பு ஏந்தி,

மகிழ்ச்சி பொங்க தீபாவளியைக் கொண்டாடும் சிறுவர்களுக்கு மத்தியில் உடல் ஊனமுற்றிருக்கும் குழந்தைகளுக்கும் அதே மகழ்ச்சியை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பினாங்கு சிங்கக் கழகம் ‘Lions Club of Penang Light’ ஏற்பாட்டில் கடந்த நவம்பர் 17-ஆம் திகதி மஸ்ஜிட் நெகிரி சாலையில் அமைந்துள்ள பெருமூளை வாத ‘The Cerebral Palsy (Spastic)’ குழந்தைகள் சங்கத்தில் இச்சிறப்புக் குழந்தைகளுக்காகத் தீபாவளி விருந்துபசரிப்பு நடைபெற்றது. இவ்விருந்துபசரிப்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு பீ பூன் போ, மாவட்டத் துணை ஆளுனர் திரு லீ பூன் ஹோ. திரு உய் சாவ் ஷுவான், சிங்கக் கழகத் தலைவர் திரு பெனடிக் பே தொங் ஹாய் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

679823_549693258381462_341942376_o

மாதிரி காசோலையுடன் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு பீ பூன் போ (நடுவில்) மற்றும் சிங்கக் கழக உறுப்பினர்கள்.

இந்தத் தீபாவளி விருந்துபசரிப்பில், பெருமூளை வாத குழந்தைகள் சங்கம் உட்பட இராமகிருஷ்ணா ஆசிரமம், சீமா ஊனமுற்றோர் மையம், செயிண்ட் ஜோசஃப் இல்லம், பினாங்கு ஊனமுற்றோர் மீட்பு சங்கம் ஆகிய சமூக அமைப்புகளிலிருந்து பல குழந்தைகள் பங்குபெற்று மகிழ்ந்தனர். மேலும் பினாங்கு 18-ஆம் ‘Boys  Brigade’ நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இத்தெய்வக் குழந்தைகளுக்காக இசை வாத்தியம், ஆடலுடன் கூடிய பாடலை வழங்கி அவர்களை உச்சிக் குளிரச் செய்தனர்.

நல்ல ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் பெற்ற வசதிமிக்க மக்கள் சமுதாயத்தில் குறைந்த வசதி வாய்ப்புகளைப் பெற்ற மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற வரையில் உதவிகளைச் செய்து வந்தால் நிச்சயம் சமுதாயப் பற்றுமிக்க சிறந்த நாடாக மலேசியா உருவெடுக்கும் என்று குழந்தைகளுக்கான தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சியின் தலைவர் திரு.முனுசாமி தம் உரையில் கூறினார். மேலும், இந்த தீபத்திருநாளை ஒட்டி இந்த ஊன்முற்ற குழந்தைகளுக்கு ஒளி கொடுத்தாற் போல் ஆறாம் முறையாக இந்தத் தீபாவளி  விருந்துபசரிப்பை ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என ஆட்சிக்குழு உறுப்பினர்  திரு பீ பூன் போ மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பங்குபெற்ற  சமூக அமைப்புகளுக்கு பினாங்கு சிங்கக் கழகத்தின் சார்பாக ரிம 500 ரொக்கம் வழங்கப்பட்டது. மேலும், இவ்விருந்து நிகழ்ச்சியை வழிநடத்த இடம் வழங்கிய பெருமூளை வாத குழந்தைகள் சங்கத்திற்கு ரிம900 ரொக்கமும் பினாங்கு ஊனமுற்றோர் மீட்பு சங்கத்திற்கு செவ்வக மேசைகளும் வழங்கப்பட்டன. மனநிறைவளித்த இத்தீபாவளி விருந்துபசரிப்பில் சுமார் 130 குழந்தைகள் பங்குபெற்று மகிழ்ந்தனர்.