உறிஞ்சுகுழாய் மற்றும் பாலீஸ்டிரின் குடிநீர் கோப்பை பயன்பாட்டுக்குத் தடை-மாநில முதல்வர்.

Admin

உறிஞ்சுகுழாய் மற்றும் பாலீஸ்டிரின் குடிநீர் கோப்பை ஆகியவற்றின் பயன்பாட்டிற்குத் தடைச் செய்தது அனைத்து மக்களுக்கு மட்டுமின்றி இந்த பூமிக்கு நல்லதாக அமையும் பொருட்டு மக்களின் ஆதரவை நம்புகிறது பினாங்கு மாநில அரசு.

சேகரிக்கப்பட்ட குப்பைகள் பினாங்கு மாநகர் கழக ஊழியர்களிடம் மறுப்பயனீட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது.

பினாங்கு மாநகர் கழகம் ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட ‘PlogClean’ திட்டம் பினாங்கு மாநிலத்தின் தூய்மை, பசுமை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்ற கோட்பாட்டினை மெய்ப்பிக்கும் வகையில் முயற்சிகள் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், பினாங்கு மாநிலத்தை தூய்மையான மாநிலமாக உருவாக்கும் மாநில அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக ‘PlogClean’ அமைந்துள்ளது என வர்ணித்தார்.
10 ஆண்டுகளுக்கு முன்னால், பினாங்கு மாநிலம் ‘குப்பை மாநிலம்’ என்ற பட்டத்தை பெற்றது. இதனை முறியடிக்க பத்தாண்டுகளில் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இப்பொழுது பினாங்கு ஆசியானின் ஒரு தூய்மையான மாநிலம்.என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இதனிடையே, 10 ஆண்டுகளின் தொடர்ச்சியான முயற்சியால் நமது பினாங்கு மாநிலம் சிறந்த வளர்ச்சியையும் மேம்பாட்டினையும் அடைந்துள்ளதைக் கண்கூட காணமுடிகிறது.
இந்த முயற்சியானது இதோடு முடிவடையாது, ஆனால் இதுவே ஒரு சிறந்த அடிக்கல்லாய் அமைந்து அனைவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒரு புதிய ஆரம்பமாகும்; இந்த முயற்சி தொடர்ச்சியாகவும் சீரான நிலையிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சாவ் அவர்கள் பெர்சியாரான் கர்பால் சிங்-இல் நடைப்பெற்ற ‘progclean’ நிகழ்வின் போது கூறினார்.

இந்நிகழ்வின் போது அரசியல் தலைவர்கள், பொது அமைப்புகள் அரசு சாரா நிறுவனங்கள, பொதுமக்கள் மற்றும் பினாங்கு மாநகர் கழக ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துக் கொண்டு, கர்பால் சிங் பெர்சியாரான் கடற்கரையைச் சுற்றி துப்புரவு பணியில் ஈடுப்பட்டனர்.

அனைவரின் ஒத்துழைப்போடு மொத்தம் 500 கிலோகிராம் குப்பைகள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது.
தொடர்ந்து, உறிஞ்சுக்குழாய் மற்றும் பாலீஸ்டிரின் குடிநீர் கோப்பை ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பினாங்கு மாநகர் கழகத்தின் பரிந்துரை, தயக்கமின்றி தொடரப்படும் எனவும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் அறிவித்தார்.