“எங்குச் செல்ல, இறுதி சவால் வெல்ல” என்ற கருப்பொருளோடு பினாங்கு மாநில சைக்கிளோட்டப் போட்டி

Admin

2013ஆம் ஆண்டின் பினாங்கு மாநில சைக்கிளோட்டப் போட்டி பசுமை & தூய்மை விளையாட்டு மன்றம் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டி எதிர்வரும் 23-6-2013 –ஆம் நாள்  காலை மணி 7.30 –க்கு பினாங்கு, பாடாங் கோத்தா லாமா எனும் தலத்தில் நடைபெறவுள்ளது.

பினாங்கு சைக்கிள் கழகம், பினாங்கு சீன டவுன் ஹால் இளைஞர் பிரிவு, ‘கிப் மீ பைப் கிரியேதிப் கிட்ஸ்’ ஆகியோர் இப்போட்டியின் இணை ஆதரவாளர்கள் ஆவர். பினாங்கு மாநில அரசு, பினாங்கு நகராண்மைக் கழகம், காவல் துறை ஆகியோர்  இணைந்து  இப்போட்டிக்கு முழு ஆதரவு நல்குகின்றனர். இப்போட்டிக்குத் தேசிய சைக்கிள் கூட்டமைப்பு மற்றும் பினாங்கு சைக்கிள் கழகம் அனுமதி வழங்கி தங்களின் தொழில்நுட்ப அதிகாரிகளை அணுப்பி இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற வழிவகுக்கப்படுகிறது.

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட சைக்கிள் கடைகளில் அல்லது இணையத்தள முகவரியான “penangevents.com.my” மூலம் பதிவு செய்துக்கொள்ளலாம். அதனுடன் ரிம70-ஐ பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பதிவு செய்யும் பங்கேற்பாளர்களுக்கு ஜெர்சி, பரிசுப் பை, மதிய உணவு பற்றுச் சீட்டு மற்றும் அதிர்ஷ்ட குழுக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

இந்த சைக்கிளோட்டப் போட்டி 3 பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியின் முதல் மற்றும் இரண்டாம் பிரிவில் 14 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே கலந்து கொள்ள முடியும், அதோடு பங்கேற்பாளர்களுக்கு நேர சிப்ஸ் வழங்கப்படும்.  “பினாங்குத் தீவு உயரடுக்குச் சவால் சுற்று” என்ற 85 கிலோ மீட்டர் போட்டியே முதல் பிரிவாகும். இப்பிரிவு நிபுணத்துவ சைக்கிள் ஓட்டுநர்களுக்கானப் பந்தயமாக அமைகிறது. இந்தப் பிரிவில் தேசிய, மாநில நிலையான சைக்கிளோட்டிகள், மற்றும் அனைத்துலக சைக்கிளோட்ட வீரர்கள் குறிப்பாகத் தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், புருனாய் ஆகிய நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். இப்போட்டியில் வெற்றி பெறும் முதல், இரண்டாம், மூன்றாம் நிலைக்கு முறையே ரிம 3000, ரிம 2000, ரிம 1000 பண ரொக்கம், வெற்றிக் கோப்பை மற்றும் தரவரிசைப் பதக்கம் வழங்கப்படும். இப்பிரிவில் 3.5 மணி நேரத்திற்குள் வந்தடையும் சைக்கிளோட்டிகளுக்கு இப்பிரிவுக்கான பதக்கம் வழங்கப்படும்.

“பினாங்குத் தீவு அமெச்சூர் சவால் சுற்று” என்ற 85 கிலோ மீட்டர் போட்டி இரண்டாம் பிரிவாகும். இப்பிரிவில் அனைத்து மாநில சைக்கிளோட்டிகள் மற்றும் பிற நாட்டு சைக்கிளோட்டிகள் வரவேற்கப்படுகின்றனர். இப்போட்டியில் வெற்றி பெறும் முதல், இரண்டாம், மூன்றாம் நிலைக்கு முறையே ரிம 3000, ரிம 2000, ரிம 1000 பண ரொக்கம், வெற்றிக் கோப்பை மற்றும் தரவரிசைப் பதக்கம் வழங்கப்படும். இப்பிரிவில் 4 மணி நேரத்திற்குள் வந்தடையும் சைக்கிளோட்டிகளுக்கு இப்பிரிற்கானப் பதக்கம் வழங்கப்படும்.

“இன்பப் பயணம்” ” என்ற 40 கிலோ மீட்டர் போட்டி மூன்றாவது பிரிவாகும். இப்போட்டியில் 12 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் 2000-க்கு அதிகமான குடும்ப உறுப்பினர் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் பங்கெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரிவில் 2.5 மணி நேரத்திற்குள் வந்தடையும் சைக்கிளோட்டிகளுக்கு இப்பிரிவிற்கானப் பதக்கம் வழங்கப்படும்.

இப்போட்டியன்று 5 தண்ணீர் நிலையம் அமைக்கப்படுகிறது. அவசர உதவிப் பிரிவு, காவல் படை, மற்றும் தன்னார்வாளர்கள் ஆகியோர் இப்போட்டி இனிதே நடைபெற முக்கிய பங்கு வகிப்பர்.

இப்போட்டியன்று நன்கொடைத் திரட்டும் வகையில் உணவுச் சந்தை பாடாங் கோத்தாவில் நடைபெறவுள்ளது. அதோடு 60க்கும் மேற்பட்ட பினாங்கு மாநிலத்தின் பிரபலமான உணவு வகைகள் விற்கப்படும். இதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி பினாங்கு சீன டவுன் ஹால் இளைஞர் பிரிவு, கல்வி நிதி மற்றும் குவோங் வா யிட் போ பிரேஸ் ஆகியோரின் தொண்டு நிகழ்ச்சிக்கு நன்கொடையாக வழங்கப்படும்.