பினாங்கு காற்பந்து சங்கத்திற்கு ரிம 250 000 மானியம்

Admin

மலேசிய காற்பந்து அரங்கில் பிரதிநிதித்துவம் பெற்ற 14 சங்கங்களில் பினாங்கு காற்பந்து சங்கம் முதன்மை வகிக்கிறது என்றால் மிகையாகாது. பினாங்கு காற்பந்து சங்கம் ‘லீகா மலேசிய காற்பந்து சங்க (FAM))’ போட்டியில் ஐந்தாம் முறை வெற்றிப் பெற்று பினாங்கு மாநிலத்திற்குப் பெருமைச் சேர்த்துள்ளது. கடந்த 27 மே 2013 –ஆம் நாள், பினாங்கு  காற்பந்து அணி பேரா YBU எதிராக 1-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று ‘பிரீமியர் லீக்’ போட்டிக்குத் தகுதிப் பெற்றிருப்பதை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெற்றிப் பெற்ற பினாங்கு காற்பந்து சங்கத்திற்குப் பினாங்கு மாநில அரசு, பினாங்கு நீர் விநியோக நிறுவன ஆதரவுடன் ரிம 250 000 –ஐ மானியமாக வழங்கியது.

      இந்நிதிக்கான காசோலையைப் பினாங்கு நீர் விநியோக நிறுவன பொது மேலாளர் ஜாசானி மைடின்சா, பினாங்கு முதல்வரும் பினாங்கு நீர் விநியோக நிறுவனத் தலைவருமான மாண்புமிகு லிம் குவான் எங்  முன்னிலையில் இச்சங்க செயலாளர் திரு இராமதுல்லா ஹஜா மைடின் பெற்றுக் கொண்டார். மாநில அரசும் பினாங்கு நீர் விநியோக நிறுவனமும் இணைந்து விளையாட்டு அரங்கில்  சாதனைப் படைக்கும் அனைத்து பினாங்கு வாழ் வீரர்களுக்கும் அங்கீகாராம் வழங்குவது வெள்ளிடைமலையாகும். அதோடு இவ்விரு தரப்புகளும் பினாங்கு இளம் விளையாட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குவதை தங்கள் கடமையாகக் கொள்வதை மானியம் வழங்குவதன் மூலம் அறியலாம் என முதல்வர் புகழாரம் சூட்டினார்.

இச்சங்கத்திற்கு மானியம் வழங்கிய மாநில அரசுக்குச் செயலாளர் திரு இராமதுல்லா ஹஜா மைடின் தன் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார். தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ‘பிரீமியர் லீக்’ காற்பந்து போட்டியில் வெற்றி மகுடம் சூடுவோம் என உறுதியளித்தார்.

பினாங்கு நீர் விநியோக நிறுவனப் பொது மேலாளர் ஜாசானி மைடின்சா அவர்கள் இந்த மானியத் தொகையானது காற்பந்து வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஊக்குவிப்புக் கொடுத்து ‘பிரீமியர் லீக்’  போட்டியில் வென்று ‘சூப்பர் லீக்’ போட்டியில் வெல்வதற்கு அடித்தளமாக அமையும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

பினாங்கு காற்பந்து வீரர்கள் தீயச் செயல்களான போதை பொருள் உட்கொள்ளுதல், பந்தையப் பணத்திற்கு அடிப்பணிதல் ஆகிய  ஆரோக்கியமற்ற நடவடிக்கையில் ஈடுபடாமல் பினாங்கு மாநிலத்திற்கு நற்பெயரை ஈட்டிக் கொடுத்துள்ளனர் என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பினாங்கு காற்பந்து சங்கம் ‘சூப்பர் லீக்’  போட்டியில் வெற்றிப் பெறும் என மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளதாகக் கூறினார்..

 

 

பினாங்கு மாநில காற்பந்து குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணியான பயிற்றுநர் மொரொக்கோ நாட்டைச் சேர்ந்த அப்டெராசாக் மெர்சாகுவா
பினாங்கு மாநில காற்பந்து குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணியான பயிற்றுநர் மொரொக்கோ நாட்டைச் சேர்ந்த அப்டெராசாக் மெர்சாகுவா