எம்.பி.எஸ்.பி வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் கருத்தை வரவேற்கிறது

Admin
AZHAR Arshad

 

புக்கிட் மெர்தாஜாம் – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி), இதன் 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைப் பெற அதிகாரப்பூர்வமாக தனது இணையக் கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது.

எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ அசார் அர்ஷாத் இக்கணக்கெடுப்பு ஜூன்,20 முதல் ஜூலை,3 வரை நடைபெறும் என்றார்.

“செபராங் பிறை குடியிருப்பாளர்கள், வயது மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல், https://www.mbsp.gov.my/ என்ற இக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் தங்களின் கருத்துக்கள், மற்றும் ஆலோசனைகளை வழங்க அழைக்கப்படுகிறார்கள்.

“இந்த இணைய கணக்கெடுப்பின் மூலம் செபராங் பிறை குடியிருப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை வழங்குவதற்கான நேரத்தையும் ஒத்துழைப்பையும் வழங்க முன்வருவதற்கு எம்.பி.எஸ்.பி பெரிதும் பாராட்டுகிறது.

“2023 எம்.பி.எஸ்.பி வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க அவர்களின் கருத்துகள் மதிப்பாய்வு செய்யப்படும்.

“இது வரவு செலவுத் திட்டத்தின் மூலம் செபராங் பிறை குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய அவசியமாகும்.

“மேல் விபரங்களுக்கு, எம்.பி.எஸ்.பி அதிகாரிகளான 04-5497460 (நோர்ஷதிலா) மற்றும் 04-5497848 (நோர்பாதி) என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்,” என்று பண்டார் பெர்டாவில் உள்ள எம்.பி.எஸ்.பி தலைமையகக் கட்டிடத்தில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அசார் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, எம்.பி.எஸ்.பி விரைவில் காகம் சுடும் திட்டத்தை ஏற்பாடு செய்யும் என்று அசார் கூறினார்

“இந்த நிகழ்ச்சி வருகின்ற ஆகஸ்ட்,13ஆம் தேதி மத்திய செபராங் பிறை, செப்டம்பர்,24 (வட செபராங் பிறை) மற்றும் அக்டோபர் 15ஆம் தேதி தென் செபராங் பிறையில் நடைபெறும்.

“இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் பொதுமக்களை எம்.பி.எஸ்.பி வரவேற்கிறது.

“பெருநிலப்பரப்பில் காகங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து இதுபோன்ற திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்தோம்.

“அதே சமயம், காகங்களை உண்பதற்காகக் கவரும் வகையில் குப்பைகளை ஆங்காங்கே கொட்டுவதையும் நிறுத்துமாறு செபராங் பிறை குடியிருப்பாளர்களை வலியுறுத்த விரும்புகிறோம். இதனால் அதிகமான காகங்கள் இனப்பெருக்கம் செய்ய வழி வகுக்கிறது,” என்று அசார் விளக்கமளித்தார்.