கெபுன் பூங்கா – அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு இளைஞர் பிரிவு, பினாங்கு மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு அலுவலகம், பினாங்கு மாநகர கழகம் (MBPP) மற்றும் பெர்ஃபெக்ட் லைஃப் யோகா ஆசியா அகாடமி ஆகியவை இணைந்து பினாங்கு இளைஞர் பூங்காவில் (Youth Park) மாநில அளவிலான அனைத்துலக யோகா தினம் 2026 வெற்றிகரமாக நடைபெற்றது.
ஒன்பதாவது முறையாக நடைபெற்ற அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டம், காலை 6.00 மணிக்கு தொடங்கியது. இதனை முன்னிட்டு, கோலாலம்பூரைச் சேர்ந்த வித்தாலயா யோகா மையத்தின் சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளரான மாஸ்டர் கவி வித்தியா தலைமையில், பொதுமக்கள் யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இயற்கை எழில் சூழ்ந்த இளைஞர் பூங்காவின் அமைதியான சூழல், மன அமைதி, புத்துணர்ச்சி மற்றும் உடல் நலத்தை மேம்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில், பினாங்கு மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஸி சென் அவர்களின் பிரதிநிதியாக சுங்கை புயூ சட்டமன்ற உறுப்பினர் பீ சின் ட்ஸே கலந்து கொண்டார்.
மேலும், மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவரும் தேசிய மன்ற உறுப்பினருமான திரு தனபாலன் நந்தகுமார் அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
“யோகா வளமான வாழ்வுக்கு வழிவகுப்பதோடு ஆரோக்கியமான நல்லெண்ணங்களை உருவாக்க உத்தேசிக்கிறது,” என இந்நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய சுங்கை புயூ சட்டமன்ற உறுப்பினருமான பீ சின் ட்ஸே கூறினார்.

“மேலும், இது பினாங்கு மாநில அரசின் பினாங்கு2030 ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் இலக்கு மற்றும் துரித வளர்ச்சியுடன் அறிவார்ந்த மாநிலமாக பிரகடனப்படுத்த சிறந்த மையக்கல்லாக திகழ்கிறது,” என பீ சின் ட்ஸே தமது உரையில் இதனைக் குறிப்பிட்டார்.
400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பல்வேறு யோகா மற்றும் நலவாழ்வு அமைப்புகள் ஆதரவு வழங்கின. அவற்றில் வித்தாலயா யோகா மையம், பெர்ஃபெக்ட் லைஃப் யோகா ஆசியா அகாடமி, சிகரம் அட்வென்ச்சர் கிளப், யோகா மைண்ட் சென்டர், யோகீஷ்ஷா யோகா சென்டர், கிரியா ஹத யோகா, சிவா யோகா, தி ஆர்ட் ஆஃப் லிவிங், ஆனந்தா யோகா சென்டர், சிதம்பரேசம் யோகா சென்டர், ஷாம் யோகா, இன்னர் பீஸ் யோகா & வெல்னஸ், சஹஜா யோகா பினாங்கு மையம் ஆகியவை அடங்கும்.
அனைத்து வயதினரும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி, உடல், மன மற்றும் ஆன்மிக நலன்களை மேம்படுத்தும் யோகாவின் முக்கியத்துவத்தை உலகளவில் எடுத்துரைக்கும் அனைத்துலக யோகா தினத்தின் உண்மையான நோக்கத்தை பிரதிபலிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையால் 2014 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், உலக மக்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
“பினாங்கு அனைத்துலக யோகா தினம் 2026, சமூக ஒற்றுமை, மன அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தை வலியுறுத்தும் அர்த்தமுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது. பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, ஒற்றுமை மற்றும் முழுமையான நலவாழ்வை ஊக்குவிக்கும் மேடையாகவும் இது விளங்குகிறது,” என மலேசிய இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் குறிப்பிட்டார்.

அன்பு, ஒற்றுமை மற்றும் உற்சாகத்துடன் யோகாவைக் கொண்டாடிய இந்நிகழ்ச்சி, அமைதி, சமநிலை மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றின் உயரிய மதிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தியது.