கம்போங் பாரு ஸ்ரீ காளியம்மன் கோவில் தீமிதித் திருவிழா

ஆயர் ஈத்தாம் சாலையில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இந்திய நாட்டிலுள்ள அம்பகரத்தூர் நகர கோவிலின் மண்ணைக் கொண்டு இக்கோவில் செதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்ரீ அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் என பெயர்பெற்றிருந்த இக்கோவில் அண்மையில்தான்  ஸ்ரீ காளியம்மன் கோவிலாக அதிகாரப்பூர்வ பெயர் மாற்றம் கண்டது. இக்கோவிலின் தற்போதைய தலைவராகத் திரு மனோகரன், துணைத் தலைவராகத் திரு கங்கையன், செயலாளராகத்  திரு லோகநாதன், உதவிச் செயலாளராகத் திரு கணேசன் மற்றும் பொருளாளராகத் திரு ஆருமுகம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.இக்கோவிலின் தனிச் சிறப்பு என்னவெனில் கருவறையில் இரு காளியம்மனின் விக்ரகங்களைக் கொண்டிருப்பதாகும். இங்கு வழிபட வரும் பக்தர்கள் இரட்டிப்பு அருளையும் மகிழ்ச்சியையும் பெற்று செல்வார்கள் என்றால் அது மிகையாகாது.

ஆண்டு விழாவான இக்கோவிலின் தீமிதித் திருவிழா கடந்த ஜூன் 2ஆம் திகதி மிகவும் கோலாகலமாக நடந்தேறியது. மே 25ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று காப்புக் கட்டிக் கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் முக்கிய பிரமுகர்களின் உபயங்கள் மிக விமரிசையாக நடைபெற்றன. அழகிய சேலை உடுத்தி வண்ண மாலைகளையும் ஜொலி ஜொலிக்கும் தங்க ஆபரணங்களையும் அணிந்து அம்மன் விக்ரகம் மிகவும் கலை நயத்துடன் அம்சமாகக் காட்சியளித்தது எனலாம். தம்மை நாடி வந்த பக்தர்களை அம்மா இன்முகத்துடன் காட்சியளித்து அருள் புரிந்தார். ஒவ்வொரு உபய நாளிலும் அம்மா கோவிலைப் பவனி வந்து தம் பக்தர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

உபய நாளில் வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காளியம்மனின் மெய்சிலிர்க்க வைக்கும் அழகிய திருவுருவம்.
உபய நாளில் வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காளியம்மனின் மெய்சிலிர்க்க வைக்கும் அழகிய திருவுருவம்.

தீமிதித் திருவிழா அன்று  அதிகாலை 1.30 முதல் பக்தர்கள், பால்குடம், பால்செம்பு, காவடி, தீச்சட்டி ஏந்தி தங்கள் நேர்த்தி கடன்களைத் செலுத்த தொடங்கினர். கனத்த மழையிலும் ஆத்தாவின் அருள் பெற மக்கள் திரளாக வந்திருந்தனர். அம்மனுக்கு அபிஷேகம் முடிவடைந்ததும் யாகங்களுடன் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கரகப் பூசாரியின் தலைமையில் தீக்குழி சிறப்புப் பிரார்த்தனை, பூஜைகளுக்குப் பிறகு தயார் செய்யப்பட்டது. அதன் பின் கோவிலைச் சார்ந்துள்ள வட்டார மக்களைக் காண அம்மாவின் வண்ணமயமான இரத ஊர்வலம் தயாரானது. இதற்கிடையில் பினாங்கு மாநில முதல்வரும், ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு லிம் குவாங் எங் ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்குச் சிறப்பு வருகையளித்தார்.  2008ஆம் ஆண்டில் ஆட்சியில் அமர்ந்தது முதல் ஒவ்வோர் ஆண்டும் முதல்வர் இக்கோவில் திருவிழாவுக்குத் தவறாமல் வருகையளிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவருடன் டத்தோ கெராமட் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ அவர்களும் வருகை புரிந்தார்.

பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்குக் கைக்கூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்
பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்குக் கைக்கூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்

மாநிலத் தலைவர்களைக் கொளரவிக்கும் வண்ணம் ஆலயம் சார்பில் அவர்களின் தலையில் பட்டுத் துணி கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பினாங்கு மாநிலத்தில் மதச் சுதந்திரம் என்பது என்றும் காக்கப்படும் என்று முதல்வர் லிம் தம் சிறப்புரையில் கூறினார். மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ் இதுவரை எந்தக் கோவிலும் இடிக்கப்பட்டதில்லை. இனிமேலும் இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார். மக்கள் தங்கள் மதத்தைப்  பேணுவதற்கும் மதம் சார்ந்த விழாக்களைக் கொண்டாடுவதற்கும் மாநில அரசு என்றும் ஆதரவளிக்கும் என்றும் கூறினார். இப்புனிதமிக்க தீமிதித் திருவிழா அன்று நாட்டின் அமைதி, ஒற்றுமை, மற்றும் வளத்திற்காக இறைவனை வேண்டிக் கொள்வோம் என்று கேட்டுக் கொண்டார். ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக முதல்வர் 3500 ரிங்கிட் நன்கொடையாக வழங்கினார். கடந்தாண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முதல்வர் 5000 ரிங்கிட் நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமல்லாது, ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய வோங் ஹொன் வாய் வசதி குறைந்த மக்களுக்குத் தீபாவளியை முன்னிட்டு பரிசுக் கூடைகளை வழங்க கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு 3000 ரிங்கிட் உதவித் தொகை வழங்கியிருப்பதையும் இங்கு நினைவுகூர விரும்புகிறோம்.

மூலஸ்தானத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீ காளியம்மனின் அருள்மிகுந்த திருவுருவ விக்ரகங்கள்
மூலஸ்தானத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீ காளியம்மனின் அருள்மிகுந்த திருவுருவ விக்ரகங்கள்

ஸ்ரீ காளியம்மன் கோவிலின் இரு இரதங்களும் பார்லிம், கம்போங் பிசாங், ஆயர் ஈத்தாம், ஆயர் பூத்தே, பாடாங் தெம்பாக் ஆகிய வட்டாரங்களின் வீதி வழியாக ஊர்வலம் வந்தன. பக்தர்கள் சிலர் அடை மழையைக் கூட பொருட்படுத்தாது ‘ஓம் சக்தி’ என்ற பக்தி கோஷமிட்டு இரத ஊர்வலத்துடன் நடந்தனர். ஆத்தாவை வரவேற்க ஆங்காங்கே பந்தல்கள் போடப்பட்டு அன்னதானங்களும் வழங்கப்பட்டன. பவனி வந்த ஆத்தாவிற்குப் பக்த கோடிகள் தீபாராதனை எடுத்து அவரின் திருவருளைப் பெற்றனர். இரவு 9 மணியளவில் இரதம் கோவிலை வந்தடைந்ததும், பக்தர்கள் அம்மன் முன்னிலையில் தீக்குழி இறங்கித் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். சிறப்பு பூஜை அர்ச்சனைகளுக்குப் பிறகு கோவிலில் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஸ்ரீ காளியம்மன் கோவிலின் திருவிழா மிகவும் விமரிசையாக இனிதே முடிவுற்றது.