கொம்தார் சின்னம் வடிவமைப்புப் போட்டி

பினாங்கு மாநிலத்தில் மிக கம்பீரமாகத் தோற்றமளிக்கும் கொம்தார் கட்டிடம் கடந்த 1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பினாங்கின் மிக உயர்ந்த கொம்தார் கட்டிடம் 232 மீட்டர் உயரமும் 65 மாடிகளும் கொண்டு நிறுவப்பட்டது. தற்போது இக்கட்டிடம் பினாங்கு மாநில அரசின் முயற்சியில் பல மேம்பாட்டுத் திட்டங்களுடன் புதுப்பொழிவுக் காணப்படவுள்ளது. மேலும், கொம்தார் கட்டிடத்திற்கென தனிப்பட்ட சின்னம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநில அரசு கொம்தார் சின்னம் வடிவமைப்புப் போட்டியை பினாங்கு மேம்பாட்டுக் கழக ஏற்பாட்டில் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை நடத்தப்பட்டது.

கொம்தார் சின்னம் வடிவமைப்புப் போட்டி வெற்றியாளர்  சூல்கிப்லி பின் ஹருன்
கொம்தார் சின்னம் வடிவமைப்புப் போட்டி வெற்றியாளர் சூல்கிப்லி பின் ஹருன்

இப்போட்டியில் 111 படைப்பாளர்கள் கைவண்ணத்தில் 150 படைப்புகள் பெறப்பட்டது. இவற்றுள் புக்கிட் மெர்தாஜாமை சேர்ந்த சூல்கிப்லி பின் ஹருன் படைப்பு சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். சிறந்த படைப்புக்கு ரிம 3000 ரொக்கப் பணமும் இதர நான்கு படைப்பாளர்களுக்கு ரிம 500 ரொக்கப்பணமும் மாநில முதல்வர் பொற்கரத்தால் எடுத்து வழங்கினார். மேலும், இச்சின்னம் கூடிய விரைவில் கொம்தாரில் பொருத்தப்படும் என அறிவித்தார்.

இதனிடையே, பினாங்கு இரண்டாம் பாலத்தையும் பத்து மாவுங் பிரதான சாலைகளை இணைக்கும் மேம்பாட்டுத் திட்டத்தால் கடந்த 17 ஆகஸ்டு அன்று போக்குவரத்து நெரிசல் நிலைகுத்தியது. இப்பிரச்சனை களையும் நோக்கத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேம்பாட்டுத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தவும் பத்து மாவுங் சாலைகளை மறுபடியும் போக்குவரத்துக்குத் திறந்து விடுமாறு பரிந்துரைத்தார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் இரவு வேளைகளில் மேம்பாட்டுத் திட்டங்கள் நடைபெறும். எனினும், இச்சாலைகளை கடக்கும் வாகனமோட்டிகள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.