கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்த பி.எஸ்.சி-19 திட்டம் தொடர வேண்டும்

பாகான் லாலாங் – மாநில அரசு பினாங்கு மாநிலத்தில் பொது சுகாதாரத்தை
வலுப்படுத்தும் நடவடிக்கையாக கோவிட்-19 பரிசோதனை திட்டத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.

புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியோவ் லியோங் கோவிட் -19 சங்கிலியை உடைக்கும் முயற்சியின் மூன்று பிரதான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும், என்று
கூறினார்.

“கோவிட்-19 பரவலை கையாள்வதில், மூன்று பிரதான திட்டங்கள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். அதாவது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றுதல் (எஸ்.ஓ.பி); தடுப்பூசி போடுதல் மற்றும் கோவிட்-19 பரிசோதனைக்கு இணங்குதல் ஆகும்.

“ஏனென்றால், ஒரு பரிசோதனை செய்யாமல், ஓர் அதிகாரியால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனமாக திட்டமிட முடியாது.

“எனவே, இத்திட்டம் மக்களுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. வரும் நாட்களில் மாநில அரசு அதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்,” என்று செபராங் பிறை மாநகர் கழக விளையாட்டு வளாகத்திற்கு அருகில் பி.எஸ்.சி-19 திட்டத்தின் செயல்பாட்டைக் கண்காணித்த பிறகு முத்துச்செய்திகள் நாளிதழ் நிருபரிடம் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், கடந்த ஜூலை,30 மதியம் 1.00 மணி நிலவரப்படி பாடாங் லாலாங் மற்றும் புக்கிட் தெங்கா மாநில சட்டமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 1,716 நபர்கள் பி.எஸ்.சி-19 பரிசோதனைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூய் சியோவ் கூறினார்.

“இந்த பரிசோதனைக்கு, பொதுச் சந்தை வியாபாரிகள் மற்றும் அங்காடி வியாபாரிகள், பேரங்காடி தொழிலாளர்கள் மற்றும் இ-ஹைலிங் ஓட்டுனர்கள் என பொருளாதார முன்னணி பணியாளர்கள் அதிகமாக வருகை அளித்தனர்.

“கூடுதலாக, மத்திய செபராங் பிறையில் பல திரள்கள் மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, உரிய நேரத்தில் பி.எஸ்.சி-19 திட்டம் அக்குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக பரிசோதனை நடத்துகிறது.

“பரிசோதனைக்குப் பிறகு, அவர்களுக்குத் தொற்று இருக்கிறதா இல்லையா என்பது அவர்களுக்குத் தெரிய வரும். பின்னர், மற்றவர்களுக்கு இத்தொற்று பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

பி.எஸ்.சி-19 திட்டமானது பண விரையத்தை ஏற்படுத்துவதோடு, மிக தாமதமாக மேற்கொள்வதாக கூறிய சில தரப்பினரின் விமர்சனங்களுக்கு பதிலளித்த
கூய் சியோவ், கோவிட்-19 தொற்றுநோய் சமூகத்தில் இருக்கும் வரை பரிசோதனைகள் 24 மணி நேரமும் நடத்தப்பட வேண்டும், என்று விளக்கமளித்தார்.

“எந்த இடத்திலும், கோவிட்-19 பரவுவதை நாம் திறம்பட சமாளிக்க விரும்பினால், தரவின் பயன்பாடு மிகவும் முக்கியமானது. எனவே நாங்கள் பரிசோதனை செய்யாவிட்டால் சமூகத்தில் இந்த வைரஸ் பரவும் விகிதம் எங்களுக்குத் தெரியாது”, என கூறினார்.