சிறுவர்களிடையே நாட்டுப்பற்றை மேலோங்க செய்வோம்

 

கெபுன் பூங்கா – பினாங்கு வாழ் மக்கள் குறிப்பாக ஆயிர் ஈத்தாம் பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் ஆயிர் ஈத்தார் சட்டமன்ற சேவை மையத்தை தொடர்புக் கொள்ளலாம் என அதன் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் ஏற்பாட்டில் நடைப்பெற்ற தேசிய தின வர்ணம் தீட்டும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கிய பின்னர் தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பல அரிய நிகழ்ச்சிகளை நடத்தி வருவது வரவேற்கத்தக்கது என சட்டமன்ற உறுப்பினர் புகழாரம் சூட்டினார்.

மேலும், பினாங்கு மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள பினாங்கு மக்கள் உதவித்திட்டம் 2.1-இல் அரசு சாரா இயக்கங்களுக்கு மானியம் வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த உதவித்தொகை பெற அனைத்து இயக்கங்களும் விரைந்து விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து எட்டாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த தேசிய தின வர்ணம் தீட்டும் போட்டி, சிறுவர்களிடையே நாட்டுப்பற்றை மேலோங்க செய்யவும் நம் நாட்டை நேசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தவும் வழிவகுக்கும் என மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத்க் தலைவர் திரு. தனபாலன் குறிப்பிட்டார்.

இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த வர்ணம் தீட்டும் போட்டியில் 6 முதல் 8 வயது சிறுவர்களும் 9 முதல் 10 வயது மாணவர்களும் கலந்து கொண்டு தங்களின் ஆற்றல்மிக்க படைப்புகளை வெளியிட்டனர்.

முதல் பிரிவில் புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த தக்‌ஷினாம்பிகை (வயது 8) முதல் நிலையிலும், இரண்டாம் நிலையில் மேபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த நிஷன் (வயது 8) மற்றும் மூன்றாம் நிலையில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியை சேர்ந்த திருஸ்சம் (வயது 8) வெற்றி வாகை சூடினர்.

இதனிடையே, இரண்டாம் பிரிவில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியை சேர்ந்த ஹர்ஷனா (வயது 10) முதல்நிலையிலும், செபராங் ஜெயா தேசியப் பள்ளியை சேர்ந்த லுதிதஸ்வன் (வயது 10) இரண்டாம் நிலையிலும் புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த லோகாம்பிகை (வயது 9) வெற்றிப் பெற்றனர். வெற்றியாளர்கள் அனைவரும் பற்றுச்சீட்டு, சான்றிதழ், கோப்பை பரிசாக தட்டிச்சென்றனர்