சுக்மா போட்டி வெற்றியாளர்களுக்கு 50% கூடுதல் சன்மானம் – சொங் எங்

அம்பு எய்தும் சங்கம் மற்றும் வெற்றியாளர்கள் சன்மானம் பெற்றுக் கொண்டனர்.(உடன் ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங்)
அம்பு எய்தும் சங்கம் மற்றும் வெற்றியாளர்கள் சன்மானம் பெற்றுக் கொண்டனர்.(உடன் ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங்)

அண்மையில் நடைபெற்ற 18-வது மலேசிய விளையாட்டு போட்டியில்(சுக்மா) சிறந்த சாதனைப் படைத்த பினாங்கு விளையாட்டு வெற்றியாளர்களுக்கு மாநில அரசு சன்மானம் வழங்கியது. இந்நிகழ்வு கடந்த 27/8/2016-ஆம் நாள் பிராங்கின் மோல் அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் உடன் இணைந்து விளையாட்டு, இளைஞர், மகளிர் மேம்பாடு, குடும்பம் மற்றும் சமூக ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் சுக்மா போட்டியில் வெற்றி மகுடம் சூடிய வெற்றியாளர்களுக்குச் சன்மானம் வழங்கினார்.
“வெற்றி பதக்கம் பெற்ற அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீங்கள் பினாங்கு மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மாநில அரசாங்கம் அறிவித்த சன்மானத்தைக் காட்டிலும் 50% கூடுதலாக உதவித்தொகை வழங்கிய மாநில முதல்வர் லிம் குவான் எங் அவர்களுக்கும் நன்றி” என வரவேற்புரையில் சொங் எங் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வெற்றியாளர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கு ரிம279,225 சன்மானம் வழங்கி அவர்களின் முயற்சிக்கும் வெற்றிக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சுக்மா அம்பு எய்தும் போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெங்கலம் பதக்கம் வென்று ஆண்களுக்கான 30மீ ‘Compound’ பிரிவில் 360 புள்ளிகள் பெற்று புதிய தேசிய சாதனை மற்றும் நான்கு சுக்மா சாதனை படைத்த வீரர் கம்பேஸ்வரனுக்கு மாநில அரசு ரிம18,000 வழங்கி கெளரவித்தது.14 வயது முதல் அம்பு எய்தும் போட்டியில் தன் தந்தை திரு.மோகனராஜா வழிகாட்டலுடன் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற தொடங்கியதாக சாதனை வீரர் கம்பேஸ்வரன் முத்துச் செய்தி நாளிதழிக்கு வழங்கிய பேட்டியில் கூறினார் .

அம்பு எய்தும் போட்டியில் தேசிய சாதனைப் படைத்த கம்பேஸ்வரன்
அம்பு எய்தும் போட்டியில் தேசிய சாதனைப் படைத்த கம்பேஸ்வரன்

தற்போது மலேசிய பஹாங் விளையாட்டுப் பள்ளியில் ‘விளையாட்டு அறிவியல்’ எனும் துறையில் மேற்கல்வி தொடருவதாகத் தெரிவித்தார். அடுத்த ஆண்டு கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ‘சீ’ விளையாட்டில் அம்பு ஏய்தும் போட்டியில் தொடர்ந்து பல சாதனைகள் படைக்க இலக்கு கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பினாங்கு மாநில அரசு, பினாங்கு விளையாட்டுக் கழகம் மற்றும் மாநில அம்பு எய்தும் சங்கம் விளையாட்டு உபகரணப் பொருட்கள் வழங்கியதோடு இந்த மாபெரும் வெற்றிக்கு துணைபுரிந்தது என்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக அம்பு எய்தும் போட்டிக்குத் தன்னைத் தயார் செய்ததோடு உற்ற ஆலோசகராகவும் திகழ்ந்த பயிற்சியாளர் குமாரி சாமினிக்கு நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன் என அகம் மகிழ தெரிவித்தார்.
இந்தியர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் பங்குக் கொள்ள பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். முத்துச்செய்தி நாளிதழ் சாதனை வீரர் கம்பேஸ்வரன் தொடந்து பல சாதனைகள் படைக்க தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டது.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);