தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) உறுப்பினர்களுக்கு நியாயம் வழங்குவீர் – மாநில முதல்வர்

படம்: செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உடன் அரசியல் தலைவர்கள்.
படம்: செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உடன் அரசியல் தலைவர்கள்.

நமது நாட்டின் 57-வது சுதந்திர தினம் பினாங்கு மாநில ரீதியில் நடைபெற்ற அணிவகுப்பின் போது 157 தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) உறுப்பினர்கள் காவல் துறையினரால் கைதுச் செய்யப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. 157 பிபிஎஸ் உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்த கொண்ட காவல்துறையினர் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமாட் சாயிட் ஹமிடி இது ஒரு சட்டவிரோத அமைப்பு என வர்ணித்ததைத் தொடர்ந்து பினாங்கு மாநில முதல்வர் தலைமையில் பினாங்கு நீதிமன்றத்தில் நீதி பரிசீலனை தாக்கல் (Fail Semakan Kehakiman) செய்யப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில முதல்வர் அவர்கள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமாட் சாயிட் ஹமிடி தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் காலம் கழித்து அந்த அறிக்கையை வெளியிட்டதாகக் கூறினார். இந்த கைது நடவடிக்கை நீதிக் கொள்கையின் அடிப்படையில் இல்லை என கடுமையாகச் சாடினார். இந்த மனுத்தாக்கலின் வழி (பிபிஎஸ்) உறுப்பினர்களுக்கு நீதி கிடைத்து அவர்கள் மீண்டும் தங்களின் கடமைகளை எவ்வித தடையின்றி செயலாற்ற இந்த வழக்கு வழிவகுக்கும் என நம்பப்படுவதாகக் கூறினார்.
வழக்கு தொடுத்த மனுதாரராக ஆட்சிக்குழு உறுப்பினரும் பிபிஎஸ் படைத் தலைவருமான பீ புன் போ அவர்கள் செயல்படுவார். இவரை பிரதிநிதித்து டத்தோ அம்பிகா, டத்தோ மாலிக் இம்தியாஸ் சர்வார், தோமி தோமஸ் மற்றும் கோபிந் சிங் டியோ என நான்கு வழக்கறிஞர்கள் கலத்தில் இறங்கிவுள்ளனர். தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) உறுப்பினர்கள் இந்த வழக்கு முடியும் வரை தன் பணியிலிருந்து ஓய்வில் இருப்பர் என்பது பினாங்கு மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், பினாங்கு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு தொடர்பில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலவர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வருகை புரிந்தனர்.