ஜூரு – தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, செபராங் பிறை தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் 60 வசதிக்குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களுடன் ரொக்க நிதியுதவியும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரிம102 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கலந்து கொண்டு, இம்முயற்சியை முன்னெடுத்த தரப்பினரைப் பாராட்டினார்.
தீபாவளி என்பது தீமையை நன்மை வெல்வதையும், இருள் நீங்கி ஒளி பிறப்பதையும், அறியாமையை அறிவு நீக்குவதையும் உணர்த்தும் சிறப்புமிக்க பண்டிகை என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பிறரிடம் அன்பு காட்டுவதற்கும், சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதற்கும் இப்பண்டிகை ஊக்கமளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த விழுமியங்கள், நாம் பிறரிடம் அன்பு காட்டவும், நம்பிக்கையை விதைக்கவும், சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகின்றன,” என்று அவர் கூறினார்.
கடந்த 32 ஆண்டுகளாகத் தொடர்ந்து சமூகநலப் பணிகளை ஆற்றி வரும் செபராங் பிறை தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சேவைகளையும் முதலமைச்சர் பாராட்டினார். மேலும், தீபாவளியை முன்னிட்டு இன்னும் பல வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு உதவிகளை விரிவுபடுத்தும் வகையில் கூடுதலாக ரிம5,000 நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
இதற்கிடையே, ஜூரு கம்போங் செந்தூல் பகுதியில், தாமான் மங்காவுக்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள நிலத்தைப் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிலம் புதிய தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
“நிலத்திற்கான கட்டணம் ஏற்கெனவே செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பள்ளியின் நலனைக் கருத்தில் கொண்டு ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும். நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும் என விரும்புகிறேன்.
“புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய முடியும் என்று பெரிதும் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இதனிடையே, இந்த அமைப்பின் தலைவர் எம். சௌந்தராஜன் பேசுகையில், அமைப்பின் உதவிகள் வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு மட்டுமன்றி, நோயாளிகளுக்கும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் உயிரிழக்கும்போது, அவர்களின் குடும்பங்களுக்கு இறுதிச்சடங்கு உதவிகளையும் வழங்குகிறோம். அதுமட்டுமின்றி, நோயாளிகளின் தேவைக்காகச் சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவப் படுக்கைகளையும் வழங்கி வருகிறோம்.
“மேலும், எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கி வருகிறோம்,” என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ் லியோங் பேசுகையில், பினாங்கு மாநிலத்தில் சமூக நலனைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள் மிகவும் முக்கியமானவை, என்றார்.
அரசாங்கம், அரசு சாரா அமைப்புகள், குடியிருப்பாளர்கள், வணிகத் துறையினர் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் மக்களின் நலனை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை கற்பகவள்ளி, செபராங் பிறை தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் துணைத் தலைவர் பி. சின்னப்பன், செயலாளர் கே. கனிசன், பொருளாளர் எஸ்.அன்பழகன், ஜி.இராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில், முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ் லியோங், எம்.சௌந்தராஜன் மற்றும் இதரப் பிரதிநிதிகள் இணைந்து பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினர்.