தாமான் அரெகா பொழுதுபோக்கு பூங்கா பசுமை தோட்டமாக உருமாற்றம் கண்டது

Admin

பினாங்கு மாநில அரசு, மேம்பாட்டு நிறுவனங்கள்   ஊராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கும் காலி நிலங்களை பல ஆக்கப்பூர்வமான மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ள பயன்படுத்தப்படும். பொதுவாகவே, மாநில அரசு இந்த காலி இடங்களை சமூக நன்மைக்காக பொழுதுபோக்கு பூங்கா, சமூக மண்டபம், உடற்பயிற்சி மையம் என பொது வசதிகளை நிர்மாணிக்கும்.

அவ்வகையில், லெபோ சுங்கை பினாங்கு 7 பகுதியில் அமைந்துள்ள மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் தாமான் அரெகா எனும் நகர்ப்புற பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டது. 

மாநில முதல்வர் கடந்த ஆண்டு மரம் நட்டு இத்திட்டத்தை தொடக்கி வைத்தார். (உடன் அரசியல் தலைவர்கள்)

இத்திட்டத்தில் பினாங்கை சேர்ந்த ‘நடிர்’ ரக மரங்கள் நடுதல்; பூங்கா அமைத்தல்; மரங்களால் அமைக்கப்பட்ட நாற்காலி; திறந்த அரங்கம்; வனம் கருப்பொருப்ளை மையமாகக் கொண்ட வளாகம்; உடற்பயிற்சி மையம்; திடல்; வண்ணத்துப்பூச்சி பூங்கா என ஒன்பது பொது வசதிகளை உள்ளடக்கியுள்ளன.

இந்த பூங்காவின் சுற்றுச்சூழல் பசுமை எழில்மிகு தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. மேலும், மரங்களில் சில்லென்று வீசும் காற்று வருகையாளர்கள் அந்த பூங்காவை சுற்றி பார்ப்பதற்கும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் சிறந்த தளமாக அமைகிறது. 

மாநில அரசு இது வரை வட கிழக்கு மாவட்டத்தில் இதுவரை  69 பொழுதுபோக்கு பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, தாமான் அரேகா  பொழுது போக்கு பூங்கா  ஒரு புதிய ஈர்ப்பைக் கொண்டு திகழ்கிறது.  இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள  விண்வெளி காப்ஸ்யூல் சிற்பத்தின் வடிவமைப்பு ஆச்சரியமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைகிறது.

ஒரு குடியிருப்புப் பகுதி பொழுது போக்கு பூங்கா இன்றி முழுமைபெறாது என்றால் மிகையாகாது. 

இந்த சிற்ப வடிவமைப்புத் திட்டம் சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சுயூ கிம் மற்றும் எஸ்.ஈ.ஏ (S.E.A) சென் பெர்ஹாட் (சிற்பம். சுற்றுச்சூழல். கலை) இணை ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த எஸ்.ஈ.ஏ நிறுவனம் அதன் சிற்பங்களை நிறுவுவதற்கு  சுங்கை பினாங்கு மற்றும் கார்பல் சிங் டிரைவ் பகுதியில் ஒரு சரியான இடத்தை தேடிக்கொண்டிருந்தது. அத்தருணத்தில், இந்த சிற்பம் பொருத்த தாமான் அரெகாவை விட சிறந்த இடம் எதுவும் இருக்க முடியாது என்று எண்ணி பரிந்துரைத்ததாக லிம் சியூ கிம் கூறினார். 

“இந்த அரெகா பொழுதுபோக்கு பூங்கா இந்த திறந்தவெளி இடத்தில் பல்வேறு பொது வசதிகளுடன் குறிப்பாக சிறுவர் விளையாட்டு பூங்கா உட்பட அமைக்க திட்டமிட்டது அனைவரும் அறிந்ததே. 

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கடந்த ஆண்டு பினாங்கு, லெபோ சுங்கை பினாங்கு 7 ல், பொழுது போக்கு பூங்காவிற்கான பசுமை திட்ட அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“பினாங்கு வாழ் பொது மக்களுக்கு சுங்கை பினாங்கு வட்டாரத்தில் மற்றொரு புதிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தளம் அமைக்கப்பட்டதை எண்ணி அகம் மகிழ்வதாக,” முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். 

இந்த பொழுது போக்கு பூங்காவின் கருப்பொருளாக ‘எங்கள் கிராமம் எங்களின் பெருமை’ (Our Kampung Our Pride) என விளங்குகிறது. 

இந்த கருப்பொருள்  ஒற்றுமையின் அவசியத்தையும் அண்டை அயலாரின் நல்லிணக்கத்தையும் நினைவூட்டுகிறது. இதன் மூலம் இந்த பொழுதுபோக்கு பூங்காவை எப்போதும் சுத்தமாகவும், பசுமையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது அனைவரின் பொறுப்பு என சித்தரிக்கிறது.

இந்த பூங்காவின் கருப்பொருளை, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் சிற்பத்தின் மேல் பகுதியில் இருக்கும் ஒரு விண்வெளி வீரர் சிலையின் பொருத்தப்பட்டிருப்பதை  காணலாம்.