தாமான் இடாமான் அடுக்குமாடி TPM80PP நிதியுதவி பெற்றது

70563193 9f78 4e60 86c4 7766d7849ce3

பத்து காவான் – பொது வீடமைப்புகளில் பராமரிப்புப் பிரச்சனைகளை எதிர்நோக்கும் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதில் மாநில அரசு உறுதியுடன் உள்ளது என மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு குறிப்பிட்டார்.

பினாங்கு வீட்டுவசதி வாரியக் குழுவுடன் தாமான் இடாமான் அடுக்குமாடி குடியிருப்புக்கு வருகையளித்த போது, சுந்தராஜு இந்த உறுதிமொழியை மீண்டும் நிறைவேற்றினார்.
“சிம்பாங் அம்பாட்டில் அமைந்துள்ள தாமான் இடாமானின் பிளோக் D இன் கூரையை மேம்படுத்தும் பணிக்காக பினாங்கு அதிகபட்ச 80% பராமரிப்பு நிதி (TPM80PP) மூலம் மாநில அரசாங்கம் ரிம142,400 பங்களித்துள்ளது.

824c65b4 5364 4e1b ab04 9c619a0ae928

“இந்தப் பராமரிப்புப் பணிக்கான மீதமுள்ள ரிம35,600-ஐ தாமான் இடாமானின் நிர்வாக வாரியம் நிதியளிக்கிறது.

“இங்கு மேற்கொள்ளப்படும் பராமரிப்புத் திட்டத்தில் நீர்ப்புகாப்பு மற்றும் நீர் ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு சாக்கடைகளை நிறுவுதல் ஆகியவை அடங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
தாமான் இடாமான் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அங்குள்ள சாலை மறுசீரமைப்புப் பணியை சீர்செய்ய கோரியுள்ளனர். இது குறித்து அவரது குழுவினரால் பரீசிலிக்கப்படும் என்றும் சுந்தராஜூ பகிர்ந்து கொண்டார்.

“பராமரிப்புப் பணிகளுக்கான விண்ணப்பங்களின் வரிசை மிகவும் நீளமானது, மேலும் அனைத்து குடியிருப்பாளர்களும் அவர்களின் விண்ணப்பம் முறை வரும் வரை பொறுமையை காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பொறுமையாக இருங்கள், பராமரிப்பு விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

தாமான் இடாமான் நிர்வாக வாரியத்தின்பிரதிநிதியான ரம்லான் ரோஸ்டி, இப்பராமரிப்புக்கு உதவிய மாநில அரசுக்கு நன்றித் தெரிவித்தார்.

மாநில அரசு, அதன் பல்வேறு வீடமைப்புப் பராமரிப்பு நிதியம் மூலம், 2008 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 36,470 பராமரிப்புப் பணிகளுக்கு மொத்தம் ரிம367.79 மில்லியன் நிதியளித்துள்ளது.
TPM80PP திட்டத்தின் கீழ், மாநில அரசு 845 பராமரிப்புப் பணிகளுக்காக மொத்தம் ரிம78.84 மில்லியன் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.