தாமான் புவா பாலாவில் 20 லட்சம் மதிப்புடைய விளையாட்டரங்கம் நிர்மாணிப்பு

Admin

கிராமமாக இருந்த புவா பாலா குடியிருப்புப்பகுதி மேம்பாட்டுப் பணி நிமித்தம் உடைப்பட்டு இன்று நவீனமயமாகவும் புத்தம் பொலிவாகவும் காட்சியளிக்கிறது. தாமான் புவா பாலாவில் வசிக்கும் மக்களின் தேவைகளைப் நிறைவு செய்யும் வண்ணம் மாநில அரசின் பரிந்துரையினால் 20 லட்சம் மதிப்புடைய விளையாட்டரங்கம் ஒன்று அங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

தாமான் புவா பாலா மக்களின் வசதிக்காக நூஸ் மெட்ரோ நிறுவனம் பணித்திருத்தத்தின் பெயரில் அங்கு ஒரு விளையாட்டு அரங்கத்தை நிர்மாணிப்பதற்கு மாநில அரசு வித்திட்டுள்ளது. இந்த பிரமாண்ட விளையாட்டரங்கத்தை அண்மையில் மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் தம் பொற்கரத்தால் திறந்து வைத்தார்.

இந்தத் தாமான் மக்களின் பொழுது போக்கிற்காகவும் தேக பயிற்சிக்காகவும் இந்த விளையாட்டரங்கம் கட்டப்பட்டுள்ளது என முதல்வர் கூறினார். அதோடு, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்துடன் நல்லிணக்கம் காணப்பட்டதாக முதல்வர் எடுத்துரைத்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க இக்கிராமத்தில் விளையாட்டரங்கத்தைக் கட்ட ஒப்புக்கொண்ட மேம்பாட்டு நிறுவனத்தினருக்குத் தம் நன்றியினை நல்கினார்.

தொடர்ந்து உரையாற்றிய இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி அவர்கள் 7 முதல் 8 லட்சம் வெள்ளி மதிப்பிலான வீடுகள் மாநில அரசின் முயற்சியில் வழங்கப்பட்டிருப்பதும் இந்த விளையாட்டரங்க நிர்மாணிப்பும் இத்தாமான் மக்களுக்கு எல்லையற்ற இன்பத்தை அளிக்கும் என்றார். முந்தைய புவா பாலா கிராமம் இடிப்பட்டப்போதிலும் நவீனமயத்துடன் காட்சியளிக்கும் இவ்விடத்திற்கு ‘தாமான் புவா பாலா’ என்று அதே பெயரைச் சூட்டியிருக்கும் மாநில அரசின் செயல்பாடு வரவேற்கத்தக்கதாகும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி, புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்ப்பால் சிங், ஸ்ரீ டெலிமா சட்ட மன்ற உறுப்பினர் நேதாஜி இராயர், டத்தோ கிராமாட் சட்ட மன்ற உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ ஆகிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.