திறந்த இல்ல உபசரிப்பு சமூகத்தில் ஒற்றுமையை மேலோங்க ஊக்குவிக்கிறது

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு ஜனநாயக செயல் கட்சி (ஐ.செ.க) மலேசியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளின் திறந்த இல்ல உபசரிப்பு விருந்தோம்பல் நிகழ்ச்சியை எற்நடத்த தவறியதில்லை.

“இம்மாதிரியான திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியை ஏற்று நடத்துவதன் மூலம் பல்லின மக்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்ய முடிகிறது.

“திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு இனத்தவரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பறைச்சாற்றுகிறது. பொது மக்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்வது சமூகத்தின் நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கிறது,” என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பினாங்கு மாநில ஐ.செ.க ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு இவ்வாறு உரையாற்றினார்.

தீபாவளி என்ற சொல்லில் காணப்படும் ‘தீபம்’ என்ற சொல்லுக்கு ‘ஒளி’ அல்லது அநீதிக்கு எதிரான வெற்றியின் அடையாளமாகத் திகழ்கிறது.

இதனை முன் உதாரணமாகக் கொண்டு மாநில அரசாங்கம், அரசியல் கட்சி, குடும்பம் மட்டுமின்றி ஒவ்வொரு தனிநபரும் நல்ல செயல்களை மட்டுமே செயல்படுத்த வேண்டும்.

மேலும், மாநில அரசாங்கம் இக்கொள்கையை வழிகாட்டியாக கொண்டு பொது மக்களின் சமூகநலனைப் பாதுகாக்க சிறந்த
கொள்கையை உருவாக்க இணக்கம் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

நான்காவது முறையாக ஐ.செ.க
மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து பினாங்கில் ஆட்சியமைத்துள்ளது. எனவே, மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் அவர்களுக்கு நிச்சயமாக பெரிய சவால்கள் உள்ளன.

எனவே, மாநில அரசின் நிர்வாகம் எப்போதும் மேம்படுத்தப்படுவதை உறுதிசெய்வது, குறிப்பாக பினாங்கு ஐ.செ.க உறுப்பினர் மட்டத்தில் பகிரப்படும் கடமையாகும், என்றார்.

மேலும் தேசிய டி.ஏ.பி தலைவர், லிம் குவான் எங்; இரண்டாம் துணை முதலமைச்சர், ஜக்தீப் சிங் டியோ; மற்றும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும்
பினாங்கு டி.ஏ.பி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ஏற்பாட்டுக் குழு தலைவருமான ஆர்.எஸ்.என் இராயர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சாய்ரீல் கீட் ஜோஹாரி, டத்தோஸ்ரீ சுந்தராஜு, லிம் சியூ கிம், பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ இராஜேந்திரன் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.