தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நல்லிணக்கத்தை உருவாக்கும் – பேராசிரியர்

இரண்டாம் துணை முதல்வரின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பிற்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் மற்றும் அரசியல் தலைவர்கள் வருகையளித்தனர்.

புக்கிட் தம்புன் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ரெசிடென்சி வில்லா முத்தியாரா 4-ல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அவர் தம் துணைவியாருடன் வருகையளித்தார். மாநில முதல்வர் இந்திய பாரம்பரிய உணவு பதார்த்தங்களை பல்லின மக்கள் மற்றும் பிரமுகர்களுடன் இணைந்து உண்டு மகிழ்ந்தார்.

ஒவ்வொரு பண்டிகையின் போதும் திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவதன் மூலம் அப்பண்டிகையின் பாரம்பரியம் மற்றும் தனித்துவம் பாதுகாக்கப்படுவதோடு இந்நாட்டில் வாழும் பல்லின மக்களின் ஒற்றுமையும் வலுப்படுத்தப்படும் என செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி .

இந்நிகழ்வில் சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங், முதலாம் துணை முதல்வர் டத்தோ அப்துல் ஹலிம் உசேன், இளைஞர் மற்றும் விளையாட்டு துணை அமைச்சரும் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்சிவன் சிம் சீ கியோங், மாநில செயலாளர் டத்தோ பாரிசான் டாருஸ், லிம் கிட் சியாங், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி தீபாவளி திருநாள் அனைத்து மலேசிய இந்தியர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.