தேசிய காற்பந்து வீரரின் நினைவாக ஜாலான் எம்.குப்பன் என பெயர்மாற்றம் கண்டது

Admin

 

பாகான் – பினாங்கு மாநில அரசு பட்டர்வொர்த் பகுதியில் அமைந்துள்ள ஜாலான் ஜிரான் 1 என்ற பெயரை ஜாலான் எம்.குப்பன் என மறுபெயரிட்டுள்ளது.

அண்மையில், ஆட்சிக்குழு சந்திப்புக் கூட்டத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி சமர்ப்பித்த அச்சாலையின் பெயரை மாற்றுவதற்கானப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

“ஜாலான் ஜிரான்,1 என்பது ஒரு புதிய சாலையாகும். நமது நாட்டின் காற்பந்து அரங்கில் மாநில அரசின் பெயரை நிலைநாட்டிய காற்பந்து வீரர்க்கு வழங்கப்படும் அங்கீகாரமாக கருதப்படுகிறது.

“தேசிய மற்றும் மாநில ரீதியிலான காற்பந்து அரங்கில் விளையாட்டு வீரராகவும் பயிற்சியாளராகவும் விளங்கிய டத்தோ எம். குப்பன் நிறைய பங்களிப்பை அளித்துள்ளார்.

“மேலும், டத்தோ எம்.குப்பன் ‘ஜெட்பூட்ஸ்’ அல்லது ‘ஹரிமாவ் பிந்தாங் புலாவ் பினாங்கு’ என்ற புனைப்பெயரால் மிகவும் விரும்பப்பட்ட வீரராகவும் பயிற்சியாளராகவும் விளங்கினார்.

“1961 சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா தங்கப் பதக்கம் வெல்ல உதவிய தேசிய அணி வீரர்களில் ஒருவராக அவர் நினைவுக்கூறப்படுகிறார்.

“அதுமட்டுமல்லாமல், 1958 இல் பினாங்கு அணி HMS மலாயா கோப்பையை வெல்ல உதவினார். மேலும், தேசிய அணி காற்சட்டையை அணிந்து மெர்டேக்கா காற்பந்து விழா போட்டியினையும் வென்றார்,” என்று பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதிக்கு ‘ஜெலாஜா ❤️ பினாங்கு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இச்சாலையின் புதிய பெயரை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

 

தேசிய காற்பந்து வீரர் எம்.குப்பன் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் நினைவுச்சின்னம் வழங்கினார்.

டத்தோ எம்.குப்பன் 1958 முதல் 1965 வரை எட்டு ஆண்டுகள் நாட்டைப் பிரதிநிதித்து விளையாடியதாக சாவ் குறிப்பிட்டார்.

“அவர் 10 முறை(musim) பினாங்கு மாநிலத்தைப் பிரதிநிதித்து விளையாடியுள்ளார், இதில் 1962 ஆண்டு முதல் மாநில காற்பந்து அணித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1967 இல் பணி ஓய்வு பெற்றார்,” என்று தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் விவரித்தார்.

மாநில மற்றும் தேசிய கால்பந்து அரங்கை வண்ணமயமாக்குவதில் இவர் செய்த அனைத்து தியாகங்களுக்கும் மாநில அரசின் சிறு அங்கீகாரமாக இது திகழ்கிறது என சாவ் மேலும் சூளுரைத்தார்.

இதனிடையே, இச்சாலையின் பெயர் மாற்றத்திற்குப் பரிந்துரைத்த பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டியின் முன்முயற்சியைப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரில் கீர் ஜொஹாரி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ அஸ்ஹார் அர்ஷத், டத்தோ எம்.குப்பன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு இந்த சரித்திர நிகழ்ச்சிக்கு ஆதரவு நல்கினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டத்தோ எம்.குப்பனின் மகன் கு.சிவபிரகாஷ் பினாங்கு மாநில அரசு தன் தந்தைக்கு அளித்த அங்கீகாரத்தைப் பாராட்டினார். இதற்கு முயற்சித்த பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டிக்கு தனது நன்றியை நவிழ்ந்தார்.

 

மறைந்த எம்.குப்பன் பயிற்றுவித்த காற்பந்து வீரர்களுடன் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.