தொல்லியல் துறை சுற்றுலா மற்றும் கல்வி வளர்ச்சிக்கு புதிய ஆதிக்கம்  – இயோ

மெர்போ – தொல்லியல் துறைக்குக் கூடுதல் கவனம் செலுத்தினால் மாநிலத்தின் பொருளாதாரத்தை அதிக உயரத்திற்குக் கொண்டு செல்லும் திறன் கொண்டது, என்று  பினாங்கு சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் ஆட்சிக்குழு உறுப்பினர் இயோவ் சூன் ஹின் கூறுகிறார்.

பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதைத் தவிர, தொல்லியல் துறையின் தனித்துவம் நம் நாட்டின் கல்வி முறையில் புதிய ஆதிக்கத்தை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்டது, என்றார்.

“மலேசியாவில், தொல்லியல் துறைக்கு அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். இத்துறையில்  முன்னோடியாகச் செயல்பட மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ள  நிபுணர்களும் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளும் தேவை.

“பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரை,  குவார் கெபா தொல்பொருள் தலம் உள்ளது. இத்தலத்தில் குவார் கெபா தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

“இந்த முன்மொழியப்பட்ட திட்டம் தொல்பொருட்கள் மற்றும் வரலாற்று கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்கவும் பராமரிப்பதற்கும் முக்கியமானது.

“ஐரோப்பா நாடுகளில் கடந்த கால வரலாற்றுக் கண்டுபிடிப்புகளை நினைவுக்கூறவும் பெருமிதம் கொள்வதற்கும் பல தொல்பொருள் தலங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் நாட்டுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் வரலாற்றை பறைசாற்ற அவசியமாகும்.

“குவார் கெபா அருங்காட்சியகம் நிர்மாணிப்பு பினாங்கின் வரலாற்றுப் புகழ் இடமாக விளங்கும்,” என்று இயோ நேற்று  கெடாவில் அமைந்திருக்கும்  புஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சுங்கை பத்து தொல்பொருள் தலத்தை பார்வையிட்டப் பின்னர் முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபரிடம் இவ்வாறு கூறினார்.

மலேசிய அருங்காட்சியகத் துறையின் (சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம்) கூற்று அடிப்படையில்,  புஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் அருங்காட்சியகம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் கி.பி மூன்றாவது முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை வர்த்தகம், இந்து மற்றும் பெளத்த மத பிரச்சார மையமாக இருந்ததற்கான ஆதாரமாக விளங்கும் தொல்பொருள் சேகரிப்புகளைக் காட்சிக்கு உட்படுத்தப்படும் மலேசியாவில் உள்ள ஒரே அருங்காட்சியகமாகும்.

இதற்கிடையில், சுங்கை பத்து தொல்பொருள் தலத்தில் எட்டாம் மற்றும் 11 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பல இந்து-பௌத்த கோவில்களின் கட்டிட இடிபாடுகள் இருப்பதாக அறியப்படுகிறது.

குவா கெபாவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் வேளையில், வடக்கு மாநிலங்களில்  உள்ள பிரதான  தொல்பொருள் தலங்களை இணைக்கும் திட்டம் குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என்று இயோ கூறினார்.

“பினாங்கு மாநிலம்  சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முன்னணி வகிக்கும். இந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகளின் நுழைவை அதிகரிக்கக்கூடும், ஏனெனில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் தொல்பொருள் தலங்களை ஆராய்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள்,” என்று இயோ மேலும் கூறினார்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் சுவரோவியக் கலைகள், பொழுது போக்கு மையங்கள், உணவு விற்பனை நிலையங்கள் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தக்கூடும். ஆயினும், தொல்லியல் துறையானது வரலாற்றுத் தன்மையுடையது. அதனை உருமாற்றம் காணச் செய்ய முடியாது என விளக்கமளித்தார்.

“பினாங்கு மாநில சுற்றுலா பெருந்திட்டத்தில் (PTMP) பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தின் நம்பகத்தன்மையைப் பற்றியும் சித்தரிக்கிறது. இது தொல்லியல் துறையின்  பன்முகத்தன்மையை நேரடியாக பிரதிபலிக்கிறது.

“மேலும், முதலீடு, உள்கட்டமைப்பு திட்டங்கள், தொழில்மயமாக்கல் மற்றும் பிற முக்கிய துறைகளில் நமது மாநிலம் சாதனைகளை முறியடித்து வரும் நிலையில், நமது நாட்டின் மற்றும் மாநிலத்தின் நற்பெயரை உயர்த்துவதில் தொல்லியல் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்த அதிகாரப்பூர்வ சுற்றுலா பயணத்தின் போது ஆட்சிக்குழு உறுப்பினருடன் வருகையளித்த அரசு அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தின் இயக்குநர் ஹரியானி முகமது, இத்தகைய வரலாற்றுத் தலங்களைப் பார்வையிட முயற்சி எடுத்ததற்காக ஆட்சிக்குழு உறுப்பினரைப் பாராட்டினார்.

“குவா கெபா அருங்காட்சியகம், நமது மாநிலத்தில் உள்ள வரலாற்றுக் கண்டுபிடிப்புகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் சிறந்த வழியாகத் திகழும்,” என  ஹரியானி நம்பிக்கை தெரிவித்தார்.