பத்து லஞ்சாங் இந்து மயானம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது

மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பத்து லஞ்சாங் இந்து மயானக் கட்டிடம்
மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பத்து லஞ்சாங் இந்து மயானக் கட்டிடம்

கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் திகதி முதல் பத்து லஞ்சாங் இந்து மயானத்தைப் பராமரிக்கும் முழு  பொறுப்பினை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏற்றுக்கொண்டது. கடந்த காலங்களில் இந்த மயானத்தின் பராமரிக்கும் பொறுப்புகளை ஏற்ற சில தரப்பினர்களின் அலட்சியப் போக்கினால் மின்சுடலை முறையாகப் பாதுகாக்கப்படாமல் பழுதடைந்திருப்பது அனைவரும் அறிந்ததே.

பத்து லஞ்சாங் இந்து மயானம் இரண்டு கட்டமாக மறுசீரமைப்புச் செய்யப்படவுள்ளது என இந்து அறப்பணி வாரியத் தலைவரும் மாநில இரண்டாம் துணை முதல்வருமான பேராசிரியர் ப.இராமசாமி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அவ்வகையில், முதல் கட்டமாக மின்சுடலை மற்றும்  மின் விநியோகப் பலகை மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், மயானத்தின் கட்டிடம் மற்றும் சுவர்களில் சாயம் பூசப்பட்டது. மேலும் மயானச் சுற்றுப்புறத்தைத் தூய்மை படுத்தப்பட்டது. இந்த மயானத்தை முறையாகப் பராமரிக்கும் பொருட்டு நான்கு முழுநேர ஊழியர்கள் பணிநிமித்தம் செய்யப்பட்டுள்ளனர். மின்சுடலையை முறையாகப் பயன்படுத்துவதற்குப் பயிற்சியளிக்கப்பட்டத் திறன்மிக்க மதிப்பிட்டாளர் மற்றும் தொழிநுட்ப வல்லுனர் ஆகிய இருவரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மற்ற இரு வேளையாட்கள் பத்து லஞ்சாங் மயானத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்பர். இந்த மயானத்தின் நிர்வாகம் சிறப்பாக நடைபெறுவதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் அதிகாரி மேற்பார்வையாளராகத் திகழ்வார்.

இந்த முதல் கட்ட மறுசீரமைப்புச் செய்வதற்கு ஏறக்குறைய ரிம 129, 843.00 செலவிடப்பட்டது. பத்து லஞ்சாங் இந்து மயானம் மறுசீரமைப்புக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியமே முழு நிதி ஒதுக்கீடு வழங்கியது சாலச்சிறந்ததாகும்.

முதல் கட்ட மறுசீரமைப்புப் பணி முடிவடைந்தவுடன் இரண்டாம் கட்ட வேலை தொடங்கப்படும் என்றார் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவரும் இரண்டாம் துணை முதல்வருமான மதிப்பிற்குரிய பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். இரண்டாம் பகுதியில் கீழ்க்காணும் பணிகள் மேற்கொள்ளப்படும்:-

i. புதிய மின்சுடலை பொருத்துதல்

ii. மயானப்பகுதியில் புதியக் கூரை பொருத்துதல்

iii.குளிர் அறையை மறுசீரமைப்பு செய்தல்

iv.மயானத்தைச் சுற்றிலும் அழகுப்படுத்துதல்

பத்து லஞ்சாங் இந்து மயானத்தை மறுசீரமைப்புச் செய்வதற்கு ஏறக்குறைய ரிம 1.5 முதல் 2.0 மில்லியன் வரை செலவிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்றார் மாநில இரண்டாம் முதல்வர்.

பத்து லஞ்சாங் இந்து மயானப் பராமரிப்புப் பிரச்சனைத் தொடர்பில் பல தரப்பினர் தகாத வகையில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தனர். இதற்குத் தீர்வுக்காணும் வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முதல் கட்ட மறுசீரமைப்பு நிறைவடையவுள்ளது. அதேவேளையில் இரண்டாம் கட்ட மறுசீரமைப்பும் வருகின்ற 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முழுமைப்பெறும் என நம்மப்படுகிறது. மறுசீரமைப்புச் செய்யப்பட்ட மின்சுடலையை மனித எடைக்கு நிகரான 80கி.கிராம் எடைக்கொண்ட உருளைக்கிளங்கை எரித்து மதிப்பீடுச் செய்யப்பட்டது.

எனவே பினாங்கு வாழ் மக்கள் மனித உடலை பாரம்பரிய முறைப்படி அல்லது மின்சுடலைப் பயன்படுத்தி தகானம் செய்வதற்கு பத்து லஞ்சாங் மயானப் பணியாட்கள் சிறந்த சேவை வழங்குவர் என்பது வெள்ளிடைமலை

மறுசீரமைப்புச் செய்யப்பட்ட மின்சுடலையைக் காட்டுகிறார் இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் திரு இராமசந்திரன்.(உடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி)
மறுசீரமைப்புச் செய்யப்பட்ட மின்சுடலையைக் காட்டுகிறார் இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் திரு இராமசந்திரன்.(உடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி)