பினாங்கு மாநில தங்கப் புத்தாண்டுக் கொண்டாட்டம் 2014

புத்தாண்டை வரவேற்ற வண்ண மயமான வானவெடிகள்
புத்தாண்டை வரவேற்ற வண்ண மயமான வானவெடிகள்

 

பினாங்கு மாநில குடிமக்கள் அனைவருக்கும் தமிழ் முத்துச் செய்திகள் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த 2013-ஆம் ஆண்டு பினாங்கு இந்திய சமுதாயத்திற்குச் சிறந்ததோர் ஆண்டாக அமைந்திருக்கும் என நம்புகிறோம். இன்பம் துன்பம், வெற்றி தோல்வி, உயர்வு தாழ்வு என்பது நம் வாழ்க்கையில் இரண்டரக் கலந்தவையாகும். ஆக, வாழ்வில் நிகழும் சோதனைகளை வாழ்வின் படிகளாக எண்ணி உயர்வோம்.

2014-ஆம் ஆண்டின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைப் பினாங்கு வாழ் மக்களோடு விமரிசையாகக் கொண்டாட மாண்புமிகு முதல்வர் மேதகு லிம் குவான் எங் தமது துணைவியார் பேட்டி சியூவுடன் பாடாங் கோத்தா தளத்திற்கு டிசம்பர் 31 பின்னிரவில் வருகை மேற்கொண்டார். அவருடன் பினாங்கு முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் பின் ஹஸ்னோன், ஆட்சிக்குழு உறுப்பினர் திரு லிம் ஹொக் செங் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மாலை 6.30 மணிக்கெல்லாம் தொடங்கிய பினாங்கு தங்கப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைப் பினாங்கு மாநில அரசு மற்றும் பினாங்கு நகராண்மைக் கழக ஆதரவுடன் CreatiVision D.C Sdn Berhad நிறுவனம் ஏற்று நடத்தியது. இதன் துணை ஆதரவாளராக SuriaFM வானொலி பண்பலையும் பங்கெடுத்தது.

புத்தாண்டு மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் மக்கள் கூட்டம்
புத்தாண்டு மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் மக்கள் கூட்டம்

ஏறக்குறைய 100,000 பேர் இப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். மலாய், சீனர், இந்தியர் என நாட்டின் தலைச் சிறந்த கலைஞர்கள் பங்குபெற்றுத் திரளாக வந்திருந்த மக்களை மகிழ்வித்தனர். ஆடல் பாடல் என்று புத்தாண்டுச் சிறப்பு மேடைப் படைப்புகளை மக்கள் கண்டு இன்புற்றுனர். அதில், பினாங்கு இந்திய மக்களை மகிழ்விக்க கோலாலம்பூரைச் சேர்ந்த வில்லன் குழுவினர் வந்திருந்தனர். வில்லன் குழுவினர் சிறந்த இந்திய அல்பத்திற்கான விருதைப் பெற்ற குழு என்றால் மிகையாகாது. அவர்கள் வழங்கிய பாடல்கள் இந்திய மக்களை மட்டுமன்றி அனைத்து இனத்தவரையும் கவரக் கூடிய வகையில் அமைந்தது. அனைத்து கலைஞர்களின் மேடைப்படைப்பு முடிவுற்றதும் மாண்புமிகு முதல்வர் லிம் புத்தாண்டை வரவேற்க மாநிலத் தலைவர்களுடன் மேடையில் ஏறினார். மணி 12.00ஐ தொட்டதும் புத்தாண்டு பிறந்ததின் அடையாளமாக இருள் சூழ்ந்த வானத்தை வானவெடிகள் அலங்கரித்து ஒளிரச் செய்தன. சுமார் ஐந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து வெடித்த அவ்வானவெடிகள் கண்களுக்குப் பரவசமாக அமைந்தது.

கூட்டரசு அரசாங்கம் பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாததைச் சுட்டிக்காட்டினார் முதல்வர் லிம் குவான் எங். இம்மாதிரியானச் செயலால் மக்கள் தனது வாழ்வில் பல இன்னல்களுக்குத் தள்ளப்படுவர் என்றார். இரண்டாவது தவணையாக ஆட்சிப் பீடத்தில் வீற்றிருக்கும் மக்கள் கூட்டணி அரசு  உலக அரங்கில் பினாங்கு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வித்திடும் என்று முதல்வர் லிம் தம் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். இவ்வாண்டில் புதிய முயற்சிகளையும் குறிக்கோளையும் கொண்டு அனைவரும் வெற்றிப் பாதையில் பயணிக்க தம் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இறுதியாக, “Penang, The Everlasting Glorious Pearl” பினாங்கு நித்திய புகழ்பெற்ற முத்து மாநிலம், என்ற கருப்பொருளோடு இனிதே தொடங்கியது தங்கப் புத்தாண்டு.

வில்லன் குழுவினரின் பாடல் மக்களின் மனதைக் கவர்ந்தது
வில்லன் குழுவினரின் பாடல் மக்களின் மனதைக் கவர்ந்தது