பன்முக கலாச்சார சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவோம் – முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – தீபத் திருநாள் என அழைக்கப்படும் தீபாவளிப் பண்டிகை
அநீதிக்கு எதிரான வெற்றியின் அடையாளமாகவும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. இந்த பொன்னான நாளில் வசதிக் குறைந்தோருக்கு உதவிக்கரம் நீட்ட உகந்த நேரமாக இது கருதப்படுகிறது.

பினாங்கில் உள்ள மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின்(MICCI) அற்புதமான முயற்சியில் வசதிக் குறைந்தோருக்கு தீபாவளிப் பரிசுக்கூடை இன்று லிட்டல் இந்தியாவில் வழங்கப்பட்டது.

சுமார் 150 வசதிக் குறைந்த குடும்பங்களுக்குத் தீபாவளி அத்தியாவசியப் பொருட்களை பினாங்கு இந்தியர் வர்த்தகர் தொழிலியல் சங்கம் சார்பில் பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் எடுத்து வழங்கினார்.

1920 களில் மலேசியாவில் நிறுவப்பட்ட ஆரம்பகால இந்தியர் வர்த்தக சங்கமாகத் தொடங்கிய பினாங்கு MICCI நமது சமூகத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.

பல ஆண்டுகளாக, இந்த அமைப்பு இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் சமூகத்திற்கு சேவை செய்வதில் அதன் அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளது.

“பினாங்கு மாநில அரசின் சார்பாக, மலேசிய பினாங்கு வர்த்தகம் மற்றும் தொழிலியல் சங்கம் நமது மாநிலத்திற்கு ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கு எங்கள் மனப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதிலும், குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் உங்கள் பங்கை மிகைப்படுத்த முடியாது.

“மேலும், அடுத்தாண்டு கொண்டாடவிருக்கும் மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தகம் மற்றும் தொழிலியல் சங்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்டம் பினாங்கின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் ஆற்றியப் பங்களிப்பின் சிறந்த மையகல்லாகத் திகழும்.

“இதனிடையே, வசதிக் குறைந்த சமூகங்களை உயர்த்துதல், ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தல் மற்றும் நமது பன்முக கலாச்சாரம் சமூகத்தில் ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட மாநிலத்தின் பினாங்கு2030 இலக்கானது சமூகத்தை கட்டியெழுப்பும் முன்முயற்சியுடன் மிகவும் ஒத்துப்போகும். இந்தச் சங்கத்தின் உன்னத முயற்சிகளுக்கு மாநில அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்,” என சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தமதுரையில் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதில் MICCI தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பதையும் நான் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். “வேலை வாய்ப்புத் திட்டம்”, “வருவாய் உருவாக்கும் நகர்ப்புற விவசாயம்”, “DOSH விழிப்புணர்வு திட்டம்”, “இ- தொழில்முனைவோர் திட்டம்” மற்றும் “இளைஞர் தொழில்முனைவோர் சவால்” போன்ற நிகழ்ச்சிகள் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிப் பரிசுக்கூடை வழங்கும் நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்கிய மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தகர் மற்றும் தொழிலியல் சங்கத் தலைவர் டத்தோ பார்த்திபன், மாநில அரசு இச்சங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவுக்கும் பங்களிப்பிற்கும் நன்றி நவிழ்ந்தார்.