பருவநிலை மாற்றத்தின் அபாயங்களை எதிர்கொள்ள இயற்கையைப் பராமரிப்பது அவசியம்

Admin

ஜார்ச்டவுன் – குப்பை அற்ற மலைப்பகுதி 2023 (Trash Free Hill 2023) திட்டத்தின் மூலம், 45 மலேசிய பல்கலைகழக ஊழியர்கள் உட்பட மொத்தம் 400 பதிவுசெய்யப்பட்ட தன்னார்வலர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை பினாங்கு கொடிமலையின் உச்சியில் சுமார் 125.02 கிலோகிராம் (கிலோ) குப்பைகளைச் சேகரித்தனர்.

மாநில நிறுவனமான புக்கிட் பெண்டேரா வாரியம் ஏற்பாட்டில், பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி), பினாங்கு மாநில வனவியல் துறை, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு பசுமைக் கழகம், தி ஹாபிடேட் ஆகியவற்றின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டதாக மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

மேலும், இத்திட்டம் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) கீழ் கொடி மலை அதன் உலக உயிர்க்கோள ஆராய்ச்சி தளத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்த உதவுகிறது.

“கொடி மலை மிகவும் சிறப்பான இடம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இங்குள்ள யுனெஸ்கோ உயிர்க்கோளக் காப்பகம் மனிதர்களும் இயற்கையும் எவ்வளவு பரிபூரணமாக ஒன்றிணைந்து இணக்கமாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

“இந்த 100 ஆண்டுகளில் கொடி மலையில் பல்வேறு உருமாற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதாவது 1923 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி செயல்படத் தொடங்கியதிலிருந்து, ஃபுனிகுலர் கேபிள் இரயில் சேவை சுமார் 100 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 48 மில்லியன் பயணிகள் கீழ்ப்பகுதி இரயில் நிலையத்திலிருந்து புக்கிட் பெண்டேராவின் உச்சி வரை பயணித்துள்ளனர்,” என குப்பை அற்ற மலைப்பகுதி 2023 எனும் திட்டத்தைத் தொடக்கி வைத்த பிறை மாநில சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு விளக்கமளித்தார்.

இத்திட்டம் மூலம், இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் அபாயங்களை எதிர்கொள்ள இயற்கையைப் பராமரிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று சுந்தராஜு நம்பிக்கை தெரிவித்தார்.

கூடுதலாக, இந்தத் தன்னார்வத் திட்டமானது பினாங்கு2030 இலக்கின் கருப்பொருளான ‘தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல்’ என்பதற்கு ஏற்ப பினாங்கு உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.

புக்கிட் பெண்டேரா கார்ப்பரேஷனின் பொது மேலாளர் டத்தோ சியோக் லே லெங் அவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.